எதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டன் – ரஜனி

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் தமது ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் மன்றம் ஆகியவற்றின் பெயரையோ கொடியையோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்ய யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முக்கியமான பிரச்சினை தண்ணீர் பிரச்சினை என்றும் அதை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கும் திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துபவர்கள் என்று யாரை நம்புகிறீர்களா அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் ரஜினிகாந்த கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, நதிகளை இணைத்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினிகாந்த் கூறி பல ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் அது இந்நேரம் பல கோடிகளாகியிருக்கும், என்று கூறினார்.

தண்ணீர் பிரச்சினையை தமது அறிக்கையில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அய்யாக்கண்ணு, இத்துடன் சேர்த்து மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குள் பாயும் நீரை தமிழகத்துக்குள்ளேயே மடை மாற்றுவதற்கான திட்டங்களை வலியுறுத்தி ரஜினிகாந்த் போராடினால் அதை நிச்சயம் வரவேற்போம் என்று கூறினார்.

தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் சொல்வது அதிமுகவுக்கு அவர் அளிக்கும் ஆதரவோ எனத் தோன்றுகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Related posts