பாரீசில் மஞ்சள் அங்கி அணிந்தோர் போராட்டம் போலீசாருக்கு சரமாரியான குத்துக்கள்.

நேற்று சனிக்கிழமை பாரீஸ் நகரத்தின் இதயப்பகுதியான மந்திரிகள் காரியாலயம் அமைந்த சாம்ஸ் எலிசேய்ஸ் பகுதியில் மஞ்சள் அங்கி அணிந்தோர் ஆர்பாட்டங்கள் வெடித்தன. அப்பகுதியில் தீ வைப்புக்கள் ஆரம்பிக்க மந்திரிகளின் நிர்வாகப் பகுதியில் இருந்த பணியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

தலைநகரில் சுமார் 3500 பேர்வரை ஆர்பாட்டங்களில் குதித்தார்கள், ஆனால் நாடு முழுவதும் சுமார் 50.000 பேர்வரை ஆர்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். எங்கும் தீ மயமாகக் காணப்பட்டது அப்பகுதி.

சிறிய இரக ட்றக் வண்டியால் மந்திரிகள் கட்டிடப்பகுதியின் முன்புறம் தாக்கப்பட்டு 15 மஞ்சள் உடைகள் அணிந்தோர் உள்ளே நுழைந்து சன்னல்களை உடைத்தார்கள். இவாகளில் சிலர் கறுப்பு ஆடைகளை அணிந்திருந்தார்கள். இவர்கள் ஜனநாயக விரோத அணி என்று கூறப்படுகிறது. இந்தப் போராட்டம் இப்போது எட்டாவது வாரமாக தொடர்கிறது. வாரவிடுமுறைகளில் மட்டும் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது.

இவர்களை ஒன்றிணைப்பதில் முகநூல்கள் முக்கிய பாத்திரம் வகிப்பதாகவும் கூறப்படுகிறது. போலீசாருக்கு விழுந்தன சரமாரியான குத்துக்கள்.

2007 ம் ஆண்டு பிரான்சின் குத்துச்சண்டை வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்த மொன்சியூர் என்பவர் மோசமான குத்துக்களை போலீசாரின் முகத்தில் சரமாரியாக இறக்கினார். போலீசார் தலைக்கவசமும் கண்ணாடி காப்பும் அணிந்திருந்தால் பெரிய சேதம் ஏற்படவில்லை. இருந்தாலும் இவர் குத்துச்சண்டை மைதானத்தில் அடிப்பதைப் போல அடிகளை இறக்கினார்.

காயமடைந்து கீழே விழுந்த போலீஸ்காரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 14 தினங்கள் லீவு வழங்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீரரை இப்போது போலீஸ் தேடுகிறது. இதைத் தொடர்ந்து ஆர்பாட்டம் சர்வதேச கவனத்தைத் தொட்டது.

ஆர்பாட்டக்காரர் கூறும் கருத்தென்ன..? தமக்கு சம்பளம் போதியதல்ல அடிமைகள் போல வேலை செய்கிறோம் ஆனால் கையில் கிடைப்பதோ வெகு சொற்பம் என்கிறார்கள்.

பிரான்சிய அரசு இந்தப் போராட்டங்கள் ஆரம்பித்ததும் அதற்கு காரணமான எரிபொருள் விலை உயர்வு முயற்சியை கைவிட்டுவிட்டது. தமது கோரிக்கை வென்றாலும் ஆர்பாட்டக்காரர் போராட்டத்தை மட்டும் கைவிடவில்லை அது தொடர்கிறது.

இனி சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தாலும் ஆர்பாட்டங்களை நிறுத்துவார்கள் என்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லை, காரணம் 100 யூரோ சம்பள உயர்வுக்கு பிரான்ஸ் இணங்கினாலும் வாரம் தோறும் நடக்கும் போராட்டத்தை நிறுத்த மறுக்கிறார்கள், ஆர்பாட்டக்காரர்.

இதற்கான நிபுணர் ஒருவர் பதில் கூறும்போது, முக்கிய விடயங்களை தெரிவித்தார். ஒன்று ஆர்பாட்டக்காரர் சொல்வது போல பிரான்சில் சம்பளம் அடிமாட்டு விலைக்கு போய்விட்டதாகக் கூற முடியாது. மக்களின் கொள்வனவு சக்தி ஐரோப்பாவில் உள்ள மற்றைய நாடுகளில் உள்ள கனதியை விட கீழே விழுந்துவிட்டதென கூறமுடியாது.

ஆனால் பிரான்சில் புதிதாக வேலைக்கு சேருவோருக்கு நியமனக்கடிதம் வழங்கப்படும்போது வெறும் ஆறுமாத கால தற்காலிக நியமனமே வழங்கப்படுகிறது. ஆகவே அவர்களின் வேலை தொடரும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

மேலும் பிரான்சிய அதிபரை பணக்காரரின் அதிபரென மக்கள் கருதுகிறார்கள். அவர் கூறும் பொருளாதார யோசனைகள் மக்களால் விளங்கிக் கொள்ளப்பட முடியாதவையாக இருக்கின்றன.

பிரான்சிய அரசு கூறும் நியாயங்கள் எப்படியிருப்பினும் அவைகள் என்னவோ மக்கள் மனங்களை வெல்ல போதியதாக இல்லை, ஏதோ ஒரு பற்றாக்குறை இருப்பதாகவே நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் ஆர்பாட்டக்காரர்களில் ஒருவர் சொன்ன வரி மிகவும் கவனத்தைத் தொடுவதாக இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக தாம் பெரும் பாடுபடுகிறோம் என்கிறார் அவர். கடந்த இரண்டு வருடங்களில் அப்படி என்னதான் நடந்தது…?

புதிய அதிபராக மக்ரொங் வந்தார். அதுபோல தஞ்சம் கோருவோர் வரவும் அதிகரித்தது. பிரான்சிய அதிபரின் நடவடிக்கைகள் அதை கட்டுப்படுத்த போதியதாக இருக்கவில்லை. பொருளாதாரத்தில் பழைய அதிபர் ஜக்சிராக்கின் கொள்கைகளை அவர் கடைப்பிடிக்கிறார்.

ஆனாலும் ஆர்பாட்டங்களின் பின்னால் கடும்போக்குவாதிகள் நிற்கிறார்கள். இதனால் பிரான்சிய அதிபரால் கலவரங்களை நிறுத்த முடியவில்லை.

இன்றைய சர்வதேச வர்த்தக போட்டாபோட்டியில் ஐரோப்பிய ஒன்றியம் இத்தனை நாடுகளை இணைத்து வைத்திருந்தும் வெற்றி பெற முடியவில்லை. ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் தேவையில்லை என்ற குரல் பிரிட்டனை அடுத்து பிரான்சில் கிளம்பப்போவதன் சங்கேதக்குறிபோல இந்த ஆர்பாட்டங்கள் உள்ளன.

வரும் மார்ச் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக மேலும் நெருக்கடி வரும், அந்த நெருக்கடி மேலும் பல நாடுகளுக்கு பரவும். இப்போதே பிரிட்டன் போலீஸார் கலகம் அடக்கும் பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தைக் காப்பாற்ற வேண்டும், இல்லையேல் ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்குமே அது ஆபத்தாக மாறிவிடும். ஆனால் இதை வெளிப்படையாக பேச தலைவர்கள் ஏனோ பயப்படுகிறார்கள். காரணம் புதிதல்ல அமெரிக்க அதிபரை பகைக்க பயப்படுகிறார்கள் என்றும் கூறலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டனை வெளியேற்றுவது போல பிரான்சையும் வெளியேற்ற கடும்போக்குவாதிகள் விரும்புவது பிரான்சோடு நின்றுவிடுமா இல்லை பரவுமா என்பது அச்சமூட்டுகிறது. ஆகவேதான் மஞ்சள் அங்கி அணிந்தோர் போராட்டம் குறித்து பிரான்சிய அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டிய தருணம் வந்துள்ளது.

ஞாயிறு டென்மார்க் றடிகல வென்ஸ்ர கட்சியின் மாநாடு நடந்தது. அதில் முக்கிய கோரிக்கையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் படைத்துறையில் இணைந்து செயற்படும் எடின்பரோ ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்ற வாக்கெடுப்பு இந்த ஆண்டு நடத்தப்படுவது அவசியமென அக்கட்சி கூறுகிறது.

ஏனென்றால் டொனால்ட் ரம்பின் உலகமும் பிரிட்டன் வெளியேற்றமும் ஐரோப்பிய நாடுகள் இறுக்கமாக இணைய வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது என்று அக்கட்சியின் தலைவர் மோற்றன் உஸ்ரகோ தெரிவிக்கிறார்.

மஞ்சள் அங்கி போராட்டப் பிரிவு தலைவர் விடுதலையாகிவிட்டார். ஆனால் ஆர்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க பிரான்சிய அரசு யோசித்துள்ளது.

அலைகள் 06.01.2019 ஞாயிறு இரவு

Related posts