ஜெயலலிதா மரணத்தில் மர்மம் சி.வி.சண்முகம் பேட்டி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர், முன்னாள் தலைமைச் செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக 75 நாட்கள் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அரசு ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்தது. இந்நிலையில் விசாரணை ஆணையம் முன் பலரும் ஆஜராகி தங்கள் தரப்பு சாட்சியங்களை அளித்து வருகின்றனர். விசாரணை ஆணையம் பிப்ரவரி 24-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இறுதிக்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது.

சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகன் ராவ், அப்போலோ நிர்வாகத்தினரும் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் உணவுச் செலவாக ரூ. 1 கோடியே 17 லட்சம் செலவிட்டதாக கூறப்பட்டது குறித்தும், வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை கேட்டபோது அமைச்சரவை அனுமதிக்கவில்லை எனவும் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளதற்கு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:

“75 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்தோம். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று ரூ.1 கோடியே 17 லட்சம் கணக்கு எழுதியுள்ளனர். யார் இட்லி சாப்பிட்டது, 3 மருத்துவர்கள் ஆஞ்சியோகிராம் செய்யச்சொல்லியும் ஏன் செய்யவில்லை? ஜெயலலிதா ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார், அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யவேண்டும் எனக்கூறியதை தடுத்தது யார், மருத்துவமனையை ஆட்டிப்படைத்த சக்தி எது. அந்த உண்மை தெரிய வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அவருக்கு வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்காக ஏர் ஆம்புலன்ஸ் அளிக்க மத்திய அரசு தயாராக இருந்தும் அதை ஏன் மறுத்தார்கள். அதற்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்பினால் மருத்துவர்கள் கவுரவம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஒரு நோயாளியைக் குணப்படுத்த வேண்டுமே தவிர கவுரவம் பார்த்து மருத்துவர்களின் கவுரவம்தான் முக்கியம் என்று பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் பின்னணியை இந்த அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும்.

ராமமோகன் ராவ் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொன்னதாகவும், அதை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மிகப்பெரிய பொய்யை, குற்றச்சாட்டை தமிழக அமைச்சரவை மீதும், அமைச்சர்கள் மீதும் ராம மோகன்ராவ் கூறினார். ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னும், அதன் பின்னரும் அமைச்சரவை கூடவே இல்லை அதற்கு நானே நேரடி சாட்சி.

அப்படியானால் ஆணையத்தில் அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் கூறினார் என்றால் அதைச் சொன்னது யார்? அவராக சொன்னாரா? அவர் பின்னணியில் இருப்பது யார்? அப்படியென்றால் ஜெயலலிதாவின் மரணத்தில் நாங்கள் எல்லாம், தொண்டர்கள் எல்லாம், இந்த நாடே சந்தேகப்பட்டதுபோல் அவரது மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆணையத்தின் இறுதி விசாரணையை முடித்து அதன் அறிக்கையை அளிப்பதற்கு முன் ஒரு இடைக்கால அறிக்கையை அளிக்க வேண்டும். ஆணையம் இதை விசாரிக்கட்டும். ஆனால் தமிழக அரசு ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும்.

ஆகவே ஐபிசி 174-ன்கீழ் சந்தேகமரணம் என வழக்குப்பதிவு சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்தால்தான் இதில் உண்மைகள் வெளிவரும்.”

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Related posts