பல ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த வெற்றி

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது.

அப்போது சிம்ரன் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன போதே, இது சூப்பர் ஹிட் ஆகும், கண்டிப்பாக நடிக்கிறேன் என்றேன்.

நான் பல வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். ரசிகர்களின் ஆதரவுதான் அதற்கு காரணம். சசிகுமார் மிக அற்புதமான மனிதர். சிறந்த இயக்குநர்.

அருமையான ‘கோ ஸ்டார்’. மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசியதாவது, “இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நீங்கள் சம்பளத்தை ஏற்றி விடுவீர்களா? என கேட்டார்கள். கண்டிப்பாக ஏற்ற மாட்டேன்.

இந்தப்படம் நிறையப்பேரின் கனவை நனவாக்கியுள்ளது, நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது.

ஒரே மாதிரி படம் பண்ண வேண்டாம். வித்தியாசமான படம் பண்ணலாம், வேறு மாதிரி ஜானர் படம் பண்ணலாம் என்கிற நம்பிக்கையை, இந்தப் படம் கொடுத்திருப்பதாக நினைக்கிறேன்.

ஃபேமிலி ஆடியன்ஸ் திரையரங்குக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள். எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

இதை என் வெற்றியாக நான் நினைக்கவில்லை. புதிய தலைமுறை வெற்றி பெற்றுள்ளதாகப் பார்க்கிறேன்.

நான் தோல்வி அடைந்திருக்கிறேன். என் தோல்வியை ஒவ்வொரு முறையும் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

இந்த படம் முதல் நாள் கலெக் ஷன் என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். தயாரிப்பாளர்கள், எல்லா நடிகர்களிடமும் கலெக்‌ஷன் பற்றிய உண்மையை சொல்லுங்கள்.

அப்போதுதான் யாரும் சம்பளத்தை ஏற்ற மாட்டார்கள். நான் நடித்த படங்களில் அதிகம் வசூல் செய்தது சுந்தரபாண்டியனும் குட்டிபுலியும்தான்.

அந்த வசூலை, இந்த ‘டூரிஸ்ட்ஃபேமிலி’ தாண்டியிருக்கிறது” என்றார்.

Related posts