பிரதமர் மோடி மீது சாதிய ரீதியான விமர்சனம்

கடந்த நவம்பர் 22ம் தேதி ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, உமாபாரதி, சாத்வி ரிதம்பரா மீது சாதிய ரீதியான விமர்சனம் வைத்த காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜோஷி கூறியதாக வெளியான செய்தியில், மோடி, உமாபாரத், சாத்வி ரிதம்பரா ஆகியோர் ‘கீழ்சாதிகளிலிருந்து’ வந்தவர்கள், இவர்களுக்கு இந்து மதம் பற்றி என்ன தெரியும்? இந்து மதம் பற்றி பிராமணர்களுக்கே தெரியும், என்று பேசியது சர்ச்சையாக பாஜகவினர் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் சி.பி.ஜோஷி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் தேர்தலில் சி.பி.ஜோஷி நத்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

சி.பி.ஜோஷியின் பேச்சு தலைவர் ராகுல் காந்திக்கே பிடிக்காமல் போக, அவர் இவ்வகையான பேச்சு கட்சியின் லட்சியங்களுக்கு மாறானது என்று கண்டித்தார், இதனையடுத்து ஜோஷி மன்னிப்புக் கேட்டார்.

ஆனால் பாஜக மன்னிக்கத் தயாராக இல்லை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பு எடுத்து கொண்டு வருத்தம் தெரிவித்தாக வேண்டும் என்று கூறியுள்ளது.

Related posts