மோடி இனி மன்னரல்ல… தெய்வக் குழந்தை

“பிரதமர் மோடியை இனி மன்னர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர் தெய்வக் குழந்தையாகி விட்டார்” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா இன்று (மே 25) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய அவர், “திருமாவளவன் போல என்னுடையது நீண்டகால கொள்கைப் போராட்டம் அல்ல. ஆனாலும் பலரும் என்னிடம் ‘ஏன் பேசுகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள்.

உடலுக்கு ஒரு காயம் ஏற்பட்டால், நாம் சும்மா இருந்தால் கூட அந்த வலி தானாகவே குறைந்துவிடும். ஆனால் ஒரு சமுதாயத்துக்கு, ஒரு நாட்டுக்கு காயம் ஏற்பட்டால், நாம் பேசாமல் இருந்தால் அது அதிகம் ஆகிவிடும்.

ஒரு கலைஞன் கோழையானால் ஒரு சமுதாயமே கோழையாகிவிடும். நான் செய்துகொண்டிருப்பது என்னுடைய கடமை.

இந்த புரிதல் என்னுடைய திறமையால் எனக்கு வந்தது அல்ல. லங்கேஷ், அம்பேத்கர், காந்தி, பாரதி, மார்க்ஸ் போன்றோரை படித்ததால் வந்தது.

கடந்த 10 ஆண்டுகளாகத்தான் மன்னரை (மோடியை) நான் எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அவரை மன்னர் என்று சொல்லமுடியாது.

மன்னிக்க வேண்டும். அவர்தான் தெய்வக் குழந்தையாகி விட்டாரே.

அவரால் நாட்டுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், இனி அவரை திட்டமுடியாது. தெய்வம் சோதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

மறைந்த கவுரி லங்கேஷ் உடைய தந்தை லங்கேஷ் தான் என்னுடைய ஆசான். அவர்தான் எங்களை செதுக்கியவர்.

அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது.

அவருடைய சிந்தனைகள் பசியால், வறுமையால் பிறந்தல்ல. அவமானத்தில் பிறந்தது” இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசினார்.

Related posts