கல்வியில் சீர்திருத்தம் வேண்டும் ?

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைகளை விரைந்து தர நடவடிக்கை எடுக்கப்படாவிடின், வடக்கில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கிருஸ்ணராஜா டனிசன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் பட்டப்படிப்பை முடித்து 3 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் எமக்கான வேலை வாய்ப்புக்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பில் எமது கருத்துக்களை நாடாளுமன்றில் பேச வேண்டும் என வடக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து மகஜர்களையும் கையளித்துள்ளோம்.

ஜனாதிபதியின் யாழ். வருகையின்போது, அவரை நேரில் சந்திக்க முயற்சித்தோம். அது எமக்கு பயனளிக்கவில்லை. இருந்தபோதிலும் ஜனாதிபதி செயலக அதிகாரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் எமது கோரிக்கைகளை முன்வைத்தோம். எமது பட்டதாரிகளின் தரவுகளை தருமாறு கோரியுள்ளார். அவரிடம் அவற்றை கையளிக்கவுள்ளோம்.

எமக்கு ஏதாவது ஒரு பொறிமுறையினை ஏற்படுத்தி வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும். அது எமது கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் பாட, அரசறிவியல் பாட பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணியை வழங்குவதால் பயனில்லை. அவர்கள் பெற்ற பட்டத்துக்கு ஏற்ப அவர்களுக்கான வேலை வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

அதேவேளை எமது கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். 20 வயதுக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யக்கூடியவாறு அந்த கல்வி சீர்த்திருத்தம் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் 25 வயதுக்கும் பட்ட மேல் படிப்புக்களை கூட முடித்து விடுவார்கள்.

நாம் 25 வயதில் முதல் பட்டப்படிப்பையே முடிக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.

Related posts