விமலின் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ ட்ரெய்லர் எப்படி?

விமலின் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது வழக்கமான ஜானரிலிருந்து மாறுபட்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விமல் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘போகுமிடம் வெகுதூரமில்லை’. நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குநர், மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்ட்டுள்ளது.

ட்ரெயலர் எப்படி? – வழக்கமான தனது காமெடி, காதல் கலாட்டா ஜானரிலிருந்து விலகி நடிகர் விமல் சீரியஸான கதைக்களம் கொண்ட படத்தில் நடித்திருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ஆம்புலன்ஸ் டிரைவரான அவர், இறந்தவரின் உடலை எடுத்துக்கொண்டு செல்கிறார். அப்போது வழியில் அவருடன் இணைகிறார் கருணாஸ்.

சில பிரச்சினைகளைத் தாண்டி இவரும் இந்த உடலை எப்படி கொண்டு சேர்க்கிறார்கள் என்ற கதையை ட்ரெய்லரில் உணர முடிகிறது. கருணாஸின் நளினம் மிகுந்த உடல்மொழி கவனம் ஈர்க்கிறது. நாடக கலைஞராக இருப்பார் என யூகிக்க முடிகிறது. மேலும் அவர் கதாபாத்திரத்தை எப்படி சித்தரித்துள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

“இந்த உலகத்துல இருக்குற ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஏதோ ஒரு தேவை இருந்துட்டுதான் இருக்கும். அந்த தேவைகள் நெருக்கடியை உருவாக்கும்” என்ற வசனத்தின் இறுதியில், “எங்க எப்டி போகணும்னு தெரியாம இருந்த எனக்கு என் மனசு சொன்னது என்னான்னா” என பேசி முடிக்கும்போது, “போகுமிடம் வெகுதூரமில்லை” என்ற படத்தின் டைட்டில் வரும் இடம் ஒருவித ரசனை மிகு கட்ஸ். மிக எளிமையான களத்தில் உருவாகியுள்ள படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Related posts