மிகவும் முக்கியமான ஒரு பெருந்தகை கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன

கலாநிதி ஏ.ரி. ஆரியரத்னவின் இறுதிச்சடங்கை அரச மரியாதையுடறன நடத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் சர்வோதய இயக்கத்தை தாபித்து அவர் 65 வருடங்களுக்கும் மேலாக செய்துவந்த சேவைகளுக்கான ஒரு அங்கீகாரமாகும். சிரமதானம், கிராமோதயம் மற்றும் சர்வோதயம் போன்ற அவர் முன்னெடுத்த கோட்பாடுகள் இன்று இலங்கையின் பிரதான குடியியல் மற்றும் அரசியல் வாழ்வின் அங்கமாக பின்னிப் பிணைந்துவிட்டன.

பாரம்பரிய நடைமுறைகளையும் நம்பிக்கை முறைமைகளையும் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்துவதில் கலாநிதி ஆரியரத்ன கடைப்பிடித்த அணுகுமுறை சர்வோதய இயக்கத்தை நாட்டின் அபிவிருத்திச் செயன்முறையின் இயற்கையான அங்கமாக மாற்றுவதற்கு உதவியது. சிரமதானம் போன்ற சமூகத்தை மையமாகக்கொண்ட பாரம்பரிய நடைமுறைகளை மாத்திரமல்ல, பன்முகத்தன்மை, சமத்துவம் போன்ற தாராள பண்புகளையும் சிவில் சமூகத்திற்கு ஊட்டுவதில் செய்த சேவையே அவரின் மகத்தான பங்களிப்பாகும். அந்த பண்புகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவச்செயவதற்கு அவர் தன்னை அர்ப்பணித்தார்.

கலாநிதி ஆரியரத்னவின் சிந்தனையும் பணியும் சிங்கள பௌத்த கலாசாரத்தில் இருந்தே தொடங்கியது. தலைநகர் கொழும்பில் பிரதான பௌத்த பாடசாலைகளில் ஒன்றான நாலந்தா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரான அவர் இன,மத,சாதி பிளவுகளினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் மற்றைய சமூகங்களை மதிக்கின்ற பண்புகளை வளர்த்தெடுப்பதில் பெரிதும் அக்கறை காட்டிச் செயற்பட்டார்.

தங்களது சமூகத்தின் மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்ய விரும்பிய இளைஞர் யுவதிகளைக் கவரும் ஒரு காந்தமாக அவரின் தலைமையில் இயங்கிய சர்வோதய இயக்கம் விளங்கியது. இன்று சிவில் சமூக அயைப்புக்களின் தலைவர்களாக இருக்கும் பலர் ஆரம்பக்கட்டத்தில் கலாநிதி ஆரியரத்னவின் அருகில் இருந்தே பயிற்சியைப் பெற்றார்கள். அவர் ‘ லொக்கு சேர் ‘ என்று அழைக்கப்பட்டார். அவருடன் பணியாற்றியவர்களில் நானும் ஒருவன். நான் அவரின் சிந்தனையின் செல்வாக்கிற்கு உள்ளானேன்.

அவர் நம்பிக்கை கொண்டிருந்த மூன்று கோட்பாடுகள் எல்லா காலத்துக்கும் முக்கியமானவை. முதலாவது அபிவிருத்தி என்பது பெரும்பான்மையானவர்களினதோ அல்லது சிறுபான்மையானவர்களினதோ நல்வாழ்வுக்காக அல்ல சகலரினதும் நல்வாழ்வுக்கானதாக இருக்கவேண்டியது அவசியமாகும். இரண்டாவது அந்த அபிவிருத்தி பொருளாதார அபிவிருத்தியாக மாத்திரமல்ல, சமூக, கலாசார, தார்மீக மற்றும் அரசியல் அபிவிருத்தி சார்ந்ததாகவும் இருக்கவேண்டும். மூன்றாவது அடிமட்டத்தில் இருந்து அபிவிருத்தியை முன்னெடுப்பது என்பது கிராம மட்டத்தில் அதிகாரத்தைப் பன்முகப்படுத்தி சாத்தியமானளவுக்கு கீழ்மட்டத்துக்கு வளங்களைக் கொண்டுசெல்வதாக இருக்கவேண்டும்.

கலாநிதி ஆரியரத்ன முழுநிறைவான ஒரு சிவில் சமூகத் தலைவர். அவர் அரச அல்லது அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் பெரும்பாக மட்டத்தில் அரசினாலும் பின்பற்றக்கூடியதாக நுண்மட்டத்தில் சாத்தியமானளவு செயற்பாடுகளை முன்னெடுக்கும் சிந்தனைகளில் இருந்தும் ஆற்றலில் இருந்துமே அவரது அதிகாரம் பிறந்தது. சர்வோதய இயக்கம் தொட்டுச்செல்லாத அபிவிருத்தியை மையமாகக்கொண்ட எந்தவொரு செயற்பாடோ அல்லது அவரிடம் குறைந்தது ஒரு பயிற்சியையாவது பெறாத சமூகப்பணியாளரோ இன்று கிடையாது.

கடந்த 65 வருட காலத்தில் இலங்கையின் பல அரசாங்கங்களில் எந்த ஒன்றாவது தொலைநோக்குடைய இந்த தலைவரிடம் அதன் தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தை ஒப்படைத்திருந்தால் நிலைமை எவ்வாறு வேறுபட்டதாக இருந்திருக்கும் என்பதை இன்றைய பொருளாதார வீழ்ச்சி சூழ்நிலையில் கற்பனை செய்துபார்க்கக் கூடியதாக இருக்கிறது.

வாழ்வில் நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டிய விடயங்கள் குறித்து விளங்கவைக்க எனக்கு கலாநிதி ஆரியரத்ன ஒரு தடவை கதையொன்றைச் சொன்னார். அது ரஷ்யாவின் தலைசிறந்த நாவலாசிரியர் டோல்ஸ்ரோயிடமிருந்து பெறப்பட்ட கதை.

ஒருவரின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான நேரம் எது? மிகவும் மக்கியமான நபர் யார்? செய்யவேண்டிய மிகவும் முக்கியமான காரியம் என்ன? என்ற மூன்று கேள்விகளுக்கு விடைகளைக் காண விரும்பிய மன்னர் ஒருவரைப் பற்றிய கதை.

இந்த கேள்விகளை புத்திசாலிகளிடம் ( ஆகவும் சிறந்த புத்திசாலிகள் அல்ல) மன்னர் கேட்டபோது பலர் வேறுபட்ட விடைகளைக் கூறினார்கள்.

சிலர் மூன்று கேள்விகளுக்கும் பிறந்த நேரம் (சோதிடம் ), தாய் அல்லது தந்தை , நன்றாக சம்பாதிப்பது என்ற விடைகளைக் கூறினார்கள்.

டோல்ஸ்ராயின் விடைகள் கலாநிதி ஆரியரத்னவுக்கு ஏற்புடையவையாக இருந்தன. மிகவும் முக்கியமான நேரம் தற்போதைய தருணமே. மிகவும் முக்கியமான நபர் தற்போது எம்முடன் இருப்பவரே. அனபைச் செலுத்தி அந்த நபருக்கு சேவை செய்வதே செய்யவேண்டிய மிகவும் முக்கியமான காரியம்.

நான் உட்பட தன்னுடன் இருந்தவர்கள் மீது கலாநிதி ஆரியரத்ன கருத்தூன்றிய கவனம் செலுத்தினார்.எமது கைகளைப் பற்றிப்பிடித்துக் கொண்டு எமது முகத்தை உற்றுநோக்கி அவர் பேசினார். அந்த கதையின்படி அவர் வாழ்ந்தார்.

Related posts