ஃபஹத்தின் புது ‘அதகள’ அவதாரமும், ஆச்சரிய அனுபவமும்!

அடிதடி, சண்டை என ‘பிஸி’யாக சென்றுகொண்டிருக்கும் ரவுடி ஒருவரின் வாழ்க்கையில் 3 மாணவர்களின் நுழைவு என்ன மாதிரியான ‘ஆவேஷ’த்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் ‘ஆவேஷம்’ (Aavesham) மலையாள படத்தின் ஒன்லைன்.
கேரளாவைச் சேர்ந்த பிபி (மிதுன் ஜெய் ஷங்கர்), அஜு (ஹிப்ஸ்டர்), சாந்தன் (ரோஷன் ஷானவாஸ்) ஆகியோர் பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேருகிறார்கள். முதலாம் ஆண்டு மாணவர்களான இவர்களை, அக்கல்லூரியில் இருக்கும் குட்டி தலைமையிலான சீனியர் குழுவினர் ராகிங் என்ற பெயரில் அடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்களைப் பழிவாங்க திட்டமிடும் இம்மூவரும், அதற்கு சரியான ‘லோக்கல் தாதா’ ஒருவரை தேடி அலைகின்றனர்.

அதன் பயனாக மலையாளியும், உள்ளூர் ரவுடியுமான ரங்கனை (ஃபஹத் ஃபாசில்) கண்டறிந்து, அவருடன் பழகுகிறார்கள். இவர்கள் பழகுவதற்கான நோக்கம் ரங்கனுக்குத் தெரியாது. இருந்தாலும், நெருங்கிப் பழகுகிறார். இந்தப் பழக்கத்தின் மூலம் பழிவாங்கும் படலத்தை மாணவர்கள் நிறைவேற்றினரா? யார் இந்த ரங்கா? அவருக்கான பின்புலம் என்ன? இந்தப் பழக்கம் இருதரப்பிலும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே திரைக்கதை.
எந்தவித திருப்பங்களும் இல்லாத ‘ஹைவே’வில் நேராக செல்லும் வாகனத்தைப் போல கல்லூரி, மாணவர்களின் அட்டகாசம், ராகிங், பழிவாங்கும் உணர்வு என மெதுவாக நகரும் திரைக்கதை ஃபஹத் ஃபாசிலின் இன்ட்ரோவுக்கு பிறகு வேகமெடுக்கிறது. ஃபஹத் ‘ரீ இன்ட்ரோடக்‌ஷன்’ என்ற டைட்டில் கார்டுக்கு நியாயம் சேர்க்கிறது அவரின் கதாபாத்திர வடிவமைப்பு. இதுவரை பார்த்திராத புது அவதாரம் அவருடையது.
மூர்க்கம் கலந்த காமெடி ‘தாதா’வாக, தாய்ப் பாசத்துக்கு கலங்குவது, துண்டு கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடுவது, தன்னுடைய கதையை கேட்டு தானே உருகுவது, அடிக்கடி மொக்கை வாங்குவது என என தன்னுடைய உடல்மொழியால் மொத்தப் படத்தையும் ‘ரங்கா’வாக தாங்குகிறார். தமிழில் ‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியார் போல மலையாளத்துக்கு கேங்ஸ்டர் ரங்கா!
அவருக்கும் சஜின் கோபுவுக்குமான கெமிஸ்ட்ரி அத்தனை கச்சிதம். இருவரின் உரையாடல்களும் காட்சிகளை கலகலப்பாக்குகின்றன. மிதுன் ஜெய் ஷங்கர், ஹிப்ஸ்டர், ரோஷன் ஷானவாஸ் 3 புதுமுகங்களும் ஃபஹத் இருந்தபோதிலும் நடிப்பில் தனித்து தெரிகின்றனர். மன்சூர் அலிகானின் ரெட்டி கதாபாத்திர என்ட்ரி சர்ப்ரைஸ்! தவிர்த்து, தன்னுடைய முந்தைய படமான ‘ரோமாஞ்சம்’ போல பாய்ஸ் ஹாஸ்டல் கணக்காக பெண் கதாபாத்திரமில்லாத படத்தை இயக்கியிருக்கிறார் ஜிது மாதவன்.
பக்காவாக ஒரு ஜாலியான திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் இப்படம், ஆக்‌ஷன் காமெடி என ஜிக்ஜாக்காக கலந்து செல்கிறது. குறிப்பாக இடைவேளை சண்டைக்காட்சி, இறுதிக் காட்சிகளில் ஃபஹத்தின் ஆவேஷ நடிப்பு, ‘விக்ரம்’ ஏஜென்ட் டீனா போல சில துணை கதாபாத்திரங்களின் அதிரடி, ‘கேஜிஎஃப்’ பாடல், அம்மா சென்டிமென்ட், ரங்காவுக்கான பின் கதை, கார் ஃபைட், டைனிங் டேபில் உடையுடன் நிற்பது உள்ளிட்ட காட்சிகள் செம்மையாக ரசிக்க வைக்கின்றன.
இவை எல்லாவற்றையும் வைத்து மிகவும் லேசான கதையை போர்த்தி உடுத்தினாலும், ‘சோர்வு’ என்ற கால் தெரியத்தான் செய்கிறது. மேற்கண்ட காட்சிகள் தவிர்த்து வரும் இடங்களில் ஆழமும் அழுத்தமும் இல்லாததால் கதை நகராமல் தடுமாறுகிறது. இடைவேளையில் கதைக்கான நோக்கம் முற்றுபெற, அதன்பின் எதை நோக்கி எதற்காக கதை நகர்கிறது என்பது புரியாமல் கடக்கிறது. திரைக்கதைக்காகவும் சேர்த்து போராடிக் கொண்டிருக்கும் ஃபஹத் இவற்றிலிருந்து மீட்க உதவுகிறார்.
படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டியதற்கான தேவையை தனது பின்னணி இசையால் உருவாக்கியிருக்கும் சுஷின் ஷ்யாம், தேவையான உற்சாகத்தையும், ‘மாஸ்’ உணர்வையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். கதையோட்டத்துடன் பயணிக்கும் சமீர் தாஹீர் ஒளிப்பதிவும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பும் தொழில்நுட்ப ரீதியாக படத்தை பலப்படுத்துகின்றன.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக சென்று பார்த்து கொண்டாட்ட மனநிலையுடன் திரும்பும் ‘மஜா’வான திரையரங்க அனுபவமே இந்த ‘ஆவேஷம்’!

Related posts