ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வசூல் கொடுக்கிறதா?

புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாததால், ஏற்கெனவே வெற்றிபெற்ற பழைய படங்களை மறு வெளியீடு செய்யும் போக்கு, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ரஜினியின் ‘அண்ணாமலை’, விஜய்யின் ‘திருமலை’, ‘காதலுக்கு மரியாதை’, அஜித்தின் ‘வாலி’, ‘சிட்டிசன்’, ஜீவாவின் ‘சிவா மனசுல சக்தி’,தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ உட்பட பல படங்கள் திரையரங்குகளில் சமீபத்தில் மீண்டும் வெளியிடப்பட்டன.

இதில், விண்ணைத் தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களுக்கு, ரீ ரிலீஸில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகக் கூறப்பட்டது. இதனால் பத்து இருபது வருடங்களுக்கு முன் ஹிட்டான பல படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிட்டு வருகின்றனர். மேலும் பல படங்களை வெளியிட இருக்கின்றனர். பழைய படங்களை, கே.எம்.சுந்தரம் பிக்சர்ஸ் சார்பில் மறுவெளியீடு செய்யும் ‘மாயாஜால்’ மீனாட்சிசுந்தரத்திடம், மறு வெளியீட்டு திரைப் படங்களுக்கான வரவேற்பு பற்றி கேட்டபோது கூறியதாவது:

பல வருடங்களுக்கு முன் ஹிட்டான திரைப்படங்களைப் பார்க்க இப்போதைய ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படம் நல்ல லாபத்தைக் கொடுத்தது. இப்போது வெளியாகும் படங்கள், ஒருவாரம் கூட தாக்குப் பிடிப்பதில்லை. ஆனால், ‘வேட்டையாடு விளையாடு’ 25 நாட்கள் ஓடியது. ‘வாரணம் ஆயிரம்’ படமும் நல்ல வசூலைப் பெற்றது. காதலர் தினத்தன்று விஜய் சேதுபதி நடித்த ‘96’ படத்தை 96 திரையரங்குகளில் வெளியிட்டோம். ஆனால், பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதேபோல ‘வாலி’ படமும் சரியாக வசூல் ஈட்டவில்லை. சில படங்கள் வரவேற்பைப் பெறுவதும் பெறாததும் சினிமாவில் சகஜம்தான். இருந்தாலும் இப்போதைய ரசிகர்கள் பழைய படங்களுக்கு அதிகமாக ஆதரவு தருகிறார்கள். இரண்டு வாரங்கள்நன்றாக புரமோஷன் செய்து, படங்களை வெளியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும்” என்கிறார்.

மேலும் கூறிய அவர், “லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘பையா’ படத்தை ஏப்.11-ல் ரிலீஸ்செய்கிறோம். விஜய் நடித்த ‘கில்லி’ படத்தை உலக அளவில் ரீ ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் பேசி வருகிறோம்” என்றார்.

Related posts