‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவு

இந்தியன் 2 மற்றும் 3 படங்களுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்குப் பின் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பேன்” என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ‘தி இந்து’ அலுவலகத்தில் நடத்திய உரையாடலில் அவர் கூறும்போது, “இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன. ‘இந்தியன் 2’ படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ‘இந்தியன் 3’ படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெறும்.

என்னுடைய தேர்தல் பிரச்சாரத்துக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். அடுத்து ‘கல்கி2898ஏடி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன்.

என்னுடைய படத்துக்கான ஃபார்முலா இன்றைய ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்துக்கான வெற்றியாக அமைந்துள்ளது என கூறுகிறீர்கள். அது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படக்குழுவுக்கு நன்றி. நான் எப்போதும் ‘லைம் லைட்’டில் இருக்கும் ஒரு பூச்சி. இது எனக்கும், இளையராஜாவுக்கும் கிடைத்த புகழாரமாக கருதுகிறேன்” என்றார்.

ஏஐ தொழில்நுட்பம், தமிழக அரசின் திரைப்பட நகரம் குறித்து பேசிய அவர், “ஏஐ என்பது புதிய தொழில்நுட்பம். நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். விஆர்எஸ், பென்ஷன் என எதுவுமே இல்லாத சினிமா போன்ற துறையில் கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

தமிழக அரசு அமைக்க உள்ள திரைப்பட நகரம் சர்வதேச சினிமா கற்றல் மையமாக திகழ வேண்டும். ஏனென்றால், உலகிலேயே அதிகமாக திரைப்படங்களை தயாரிக்கும் நாடு நம்முடையது. திரைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் ஒரு நிறுவனம் வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மலையாளத் திரையுலகம் நம்மைவிட முன்னோக்கிச் செல்வதற்குக் காரணம், அவர்கள் சர்வதேச சினிமாவைப் பற்றி அறிந்திருப்பதுதான்” என்றார்.

Related posts