தி.மு.க.வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் வடிவேலு?

நடிகர் வடிவேலுவுக்கு தி.மு.க. சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைதள உலகில் கடந்த 15 வருடங்களாக நடிகர் வடிவேலுதான் சூப்பர் ஸ்டார். படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் வடிவேலு இல்லாத இன்டர்நெட் தமிழகத்தில் கிடையாது. மீம் உலகில் இப்போதும் வடிவேலுதான் காமெடி கிங். நேசமணியில் தொடங்கி வண்டுமுருகன் வரை வடிவேலுவின் கதாபாத்திரங்கள்தான் இப்போதும் இப்போதும் தமிழக மக்களை கவர்ந்து வருகின்றன. 2011ல் வடிவேலு தமிழக சினிமா உலகில் டாப்பில் இருந்தார். அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடித்தன. ஒரு படம் விடாமல் எல்லா படங்களிலும் வடிவேலுவின் காமெடி பெரிய வரவேற்பை பெற்றது.

இத்தனை நாட்கள் அரசியல் குறித்து பேசாமல் இருந்த நடிகர் வடிவேலு, தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் குறித்தும், தி.மு.க.மற்றும் கருணாநிதி குறித்தும் அதிகம் பேசத் தொடங்கியுள்ளார். அதிலும் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியுடன் இணைந்து நடித்த பிறகு தி.மு.க.வுடன் அவரது நெருக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சமாதிக்கு சில தினங்களுக்கு முன் சென்று சுற்றிப் பார்த்த அவர், இது சமாதி இல்லை சன்னதி என்றார்.

தங்களால் பாதிக்கப்பட்ட வடிவேலுவுக்கு ஒரு வாய்ப்பு வழங்க தி.மு.க. முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலுவை தி.மு.க. சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கலாமா என்பது குறித்து அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வடிவேலுவுடனும் ஆலோசிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
நடிகர் வடிவேலு தி.மு.க.சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Related posts