திரை விமர்சனம்: அதோமுகம்

காதல் மனைவி லீனாவுக்கு (சைதன்யா பிரதாப்) புதுமையான பிறந்த நாள் பரிசு கொடுக்க நினைக்கிறார் கணவர் மார்ட்டின் (எஸ்.பி.சித்தார்த்). அதற்காக மனைவியின் ஸ்மார்ட் ஃபோனில் ‘ ஸ்பை கேமரா ஆப்’ ஒன்றை இன்ஸ்டால் செய்து, மனைவியின் அன்றாட நடவடிக்கைகளை அலுவலகத்திலிருந்து ரகசியமாக நோட்டம் விடுகிறார். ஒரு கட்டத்தில் மனைவியைத் தேடி, மர்ம நபர் வீட்டுக்கு வந்துபோவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவர் யார், அவருக்கும் மனைவிக்கும் என்ன தொடர்பு என்பதை அறியும் முயற்சியில் மார்ட்டின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வின் முடிவிலும் அதிர்ச்சி காத்திருக்கிறது. தன்னைச் சுற்றியும் மனைவியைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா, இல்லையா என்பது கதை.

தேயிலை எஸ்டேட் நிர்வாகியான நாயகனின் தனிப்பட்டப் பிரச்சினைபோல் தொடங்கும் படம், திட்டமிடப்பட்ட ‘சதிக் கோட்பாட்’டின் காவியமாக மெதுவாக நிறம்மாறுகிறது. முதல் திருப்பம் தொடங்கி, அடுத்தடுத்த திருப்பங்கள் வரை, எதுவும்திணிப்பாக இல்லாமல், மையக் கதைக்குள் கச்சிதமாகப் பொருந்துகின்றன. அதேபோல், எந்த திருப்பத்தையும் யூகித்துவிடமுடியாத, நம்பகமான காட்சியமைப்புகள் மூலம் சித்தரித்திருப்பது நிறைவான திரை அனுபவத்தைக் கொடுக்கிறது.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதைக்குக் குளிரும் பசுமையும் போர்த்திக் கிடக்கும் நீலகிரியைக் கதைக்களமாகத் தேர்வு செய்தது, நாயகனுக்கு இணையாக நாயகி கதாபாத்திரத்தை எழுதியது, தேயிலை தொழிலைக் கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு ‘டீடெயில்’ செய்தது, டிஜிட்டல் ஓவியங்கள் மூலம் முன்கதையை ‘லிமிடெட் அனிமேஷன்’ முறையில் விவரித்தது, வரிசை கட்டும் திருப்பங்களைத் திரைக்கதையில் சரியான கால இடைவெளியில் இடம்பெறும்படி படத்தொகுப்பை (விஷ்ணு விஜயன்) கையாண்டது என அறிமுக இயக்குநர் சுனில் தேவ், ஆழ்ந்த ஈடுபாட்டை காட்டியிருக்கிறார்.

தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் பின்னணி புரியாமல் குழம்புவது, அதேநேரம் துணிந்து உண்மையைத் தேடிக் களமிறங்குவது, மனைவியை விட்டுக்கொடுக்காமல் முன்னகர்வது, இறுதிக்கட்டத்தில் தன்னிலை உணர்வது எனத் தனது ‘கேரக்டர் ஆர்க்’கை சிறப்பான நடிப்பின் வழி வரைந்து காட்டிவிடுகிறார் நாயகன் எஸ்.பி.சித்தார்த். அவர் மனைவியாக நடித்திருக்கும் சைதன்யா பிரதாப், அவரது கதாபாத்திரம் குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியாத அப்பாவி மனைவியாக நம்ப வைக்கிறார்.

நீலகிரியின் பசுமைக்குள்ளும் குளிருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் தனிமை, மர்மம் ஆகியவற்றை பாலுமகேந்திராவை நினைவூட்டும் வண்ணம் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண் விஜயகுமார். கதையோட்டத்துக்கான இரண்டு பாடல்களைக் கேட்கும்விதமாக கொடுத்திருக்கும் மணிகண்டன் முரளியும், பின்னணி இசைக்கோர்பு செய்திருக்கும் சரண் ராகவனும்சிரத்தை மிகுந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம், போதிய தர்க்க நியாயங்களுடன் கூடிய நம்பகமான திருப்பங்களால் கவனத்தைக் கவரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர் களுக்கு இது சிறந்த திரை அனுபவம்.

Related posts