டென்மார்க்கின் பிரபல அரசியல் தலைவர் திடீர் மரணம்

சோன் பாப்ப போவுல்சன் என்றால் டென்மார்க்கில் தெரியாதவர்களே இல்லை என்று கூறுமளவிற்கு பிரபலமாக இருந்த தலைவர் வயது 52 நேற்று திடீரென மரணமடைந்து ஊடகங்களில் முதல் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவராக இருந்தவர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் கடந்த வெள்ளி வயன் நகரத்தில் இடம் பெற்றது , அந்த நேரம் திடீரென விழுந்தார். மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இது ஏற்பட்டுள்ளது.

அவசர அவசரமாக ஊதின்ச பல்கலைக்கழக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டாலும் இவருடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சனி பி.ப 13.13 ற்கு மரணமடைந்தார்.

2010 – 2014 வரை வீபோ நகரத்தின் மேயராக இருந்து கொன்ஸ்சவேட்டிவ் கட்சியின் தலைவராக வந்தவர். கடந்த 2015 பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 2016 – 19 வரை நீதி அமைச்சராக பணியாற்றியவர்.

இவருடைய கொன்ஸ்சவேட்டிவ் கட்சி போல் சுலுட்டர் காலத்தில் டென்மார்க்கில் ஆளும் கட்சியாக இருந்தது. தமிழர் விவகாரம் என்ற சிக்கலில் மாட்டி ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் இக்கட்சியால் ஆட்சியில் மீண்டும் ஏற முடியவில்லை. பல தலைவர்கள் வந்தாலும் மீண்டும் வெற்றி பெற அவர்களிடம் தகுதி போதியதாக அமையவில்லை. தொடர்ந்து தலைமை மாற்றங்கள் நடைபெற்றன. கடமையை சரிவர செய்ய முடியாத தலைவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் இவர் காலம் ஆரம்பிக்கிறது.

பிரபலமாக வந்தாலும் ஐந்து ஆசனங்களுக்குள் முடக்குப்பட்ட கட்சியை மீட்க முடியவில்லை, யுனிக்கான சிந்தனையை இவருடைய பழமைவாத மனம் கொண்ட கட்சிக்குள் மலர வைக்க முடியவில்லை.

இந்தப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்து போராடியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. எத்தனையோ வேண்டத்தகாத அனுபவங்கள் இவர் வாழ்க்கையை மோதி விபத்திற்குள் தள்ளினாலும் இரும்பு போன்ற மனதுடன் அதையெல்லாம் எதிர்த்து துணிந்து போராடியவர்.

மரணத்தின் பின் இவருடைய வரலாற்றையும் வாழ்வையும் பலர் பாராட்டியுள்ளனர். ஆனாலும் அவர்களிலும் பலர் இவரைச் சரியாக மதிப்பிட முடியாமல் சம்பிரதாய பூர்வமாகவே பதிவுகளையே வழங்குவது தெரிகிறது.

ஆயினும் வாழ்வின் சகல சவால்களையும் ஏற்று அதற்குள் ஒரு புது வழி தேடி போராட துடித்த ஒரு மனிதனை தனது வரலாறாக உலகிற்கு விட்டுச் சென்றுள்ளார். இவர் வாழ்வு படிக்க வேண்டிய ஒரு சிறந்த பாடப்புத்தகம். நவீன உலக அரசியலில் ஒரு மைல் கல்..

அலைகள் 03.03.2024

Related posts