10 நாட்களில் ரூ.50 கோடி: வசூலில் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பிரமயுகம்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022, 2023-ஆம் ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது.

மலையாளத்தில் வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராகுல் சதாசிவம். அவரது இயக்கத்தில் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரமயுகம்’. மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அர்ஜூன் அசோகன், சித்தார்த் பரதன், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கறுப்பு – வெள்ளை திரையனுபவத்துடன் உருவான இப்படத்துக்கு கிறிஸ்டோஃபர் சேவியர் இசையமைத்துள்ளார். ஹாரர் – த்ரில்லர் பாணியிலான கதையைக் கொண்ட இப்படம் மிகச்சிறந்த திரையனுபவத்துக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதன் எதிரொலியாக ரூ.25 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் படம், வெளியான 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளது. கடந்த 23-ம் தேதி முதல் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

மம்மூட்டியின் பாக்ஸ் ஆஃபீஸ்: கடந்த 2022-ம் ஆண்டு வெளியான மம்மூட்டியின் ‘பீஷ்மபருவம்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்தது. கடந்த ஆண்டு வெளியான ‘கண்ணூர் ஸ்குவாட்’ ரூ.100 கோடியை வசூலித்தது. தற்போது ‘பிரமயுகம்’ ரூ.100 கோடியை நோக்கி பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts