மலையாள இயக்குநர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

புதுமுகங்கள் ஆதர்ஷ், சான்ட்ரா ஜோடியாக நடிக்கும் படம், ‘என் சுவாசமே’. மற்றும் கொளப்புள்ளி லீலா, லிவிங்ஸ்டன், அம்பிகா மோகன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை மணிபிரசாத் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். எஸ்விகேஏ மூவிஸ் சார்பில் சஞ்சய் குமார், எஸ்.அர்ஜுன் குமார், எஸ்.ஜனனி தயாரித்துள்ளனர்.

பிஜே இசை அமைத்துள்ள இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “மலையாளத்தில் இருந்து வந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மலையாளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்திய அளவில் மலையாள இயக்குநர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கதையை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கலைக்கு மொழி கிடையாது” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, “மலையாள சினிமாவில் கதைக்காகத் தான் ஹீரோ. ஹீரோவுக்காக படம் செய்ய மாட்டார்கள். அநாவசிய செலவு செய்ய மாட்டார்கள், இங்கு ஏவி.எம்மில் ஷூட்டிங் வைத்தாலும் கேரவன் கேட்கிறார்கள். மம்மூட்டி தயாரிப்பாளருக்குச் செலவு வைப்பதே இல்லை. அவரே சொந்தமாக கேரவன் வைத்திருக்கிறார். தமிழ் ஹீரோக்கள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்

Related posts