மதுவால் ஏற்படும் பிரச்சினையை பேசும் கிளாஸ்மேட்ஸ்

நடிகரும் இயக்குநருமான சரவண சக்தி இப்போது இயக்கியுள்ள படம், ‘கிளாஸ்மேட்ஸ்’.

முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்து அங்கயற்கண்ணன் நாயகனாக நடித்துள்ளார். பிரணா, மயில்சாமி, சாம்ஸ், அருள்தாஸ், அயலி அபி உட்பட பலர் நடித்துள்ளனர்.

முன்னாள் டிஜிபி ஜாங்கிட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிருத்வி இசை அமைத்துள்ளார். அருண்குமார் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம்பற்றி அங்கயற் கண்ணன் கூறியதாவது: சின்ன சின்னப் படங்களில் நடித்து, சினிமா கற்றுக்கொண்டேன்.

எனக்கான அடையாளம் வேண்டும் என்பதற்காக இப்போது நானே தயாரித்து இதில் நடித்துள்ளேன். மதுவால் ஏற்படும் பிரச்சினையைப் பேசும்படம் இது.

இன்றைய சமூகத்துக்குத் தேவையான கதையைச் சொல்லி இருக்கிறோம்.

சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. குடித்துவிட்டு வீட்டுக்கு வருபவர்களால் ஒவ்வொரு குடும்பத்திலும் தினமும் ஏதாவது பிரச்சினை நடக்கிறது.

அதை உளவியல் ரீதியாக இந்தப் படம் சொல்லும். அதற்காகப் போதனை ஏதும் இருக்காது. ஒரு வாழ்க்கையை சொல்லியிருக்கிறோம்.

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் சிந்திக்க வைப்பதாக இருக்கும்.

இந்தப் படத்தின் டிக்கெட் கட்டணத்தில் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து மதுவுக்கு அடிமையானவர்களின் குழந்தைகளின் கல்விக்காகக் கொடுக்க இருக்கிறோம். இவ்வாறு அங்கயற் கண்ணன் கூறினார்.

Related posts