சாதிய வர்க்கத்துக்கு எதிராக சண்டை செய்தவர் விஜயகாந்த்

“சாதிய வர்க்கத்துக்கு எதிராகவும், சக்திவாய்ந்த ஆளுமைகளுக்கு எதிராகவும் சண்டை செய்தவர் விஜயகாந்த். அவருடைய இறப்பை சினிமாவுக்கும், அரசியலுக்கும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறேன்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “ஊரில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் நான் உறுப்பினராக இருந்தவன். அவர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடித்த திரைப்படங்களில் மக்களுக்கு ஆதரவாக நிற்கும் கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்துள்ளார். என்னுடைய இளம் வயது காலங்களை நினைத்துப் பார்த்தால், நான் விஜயகாந்த் ரசிகனாகத்தான் இருந்திருக்கிறேன்.
அவர் எனக்கு பிடித்த நடிகர். அவருடைய அரசியலும், திரையுலகில் அவரது ஆளுமையும் மிக முக்கியமான விஷயங்களாக இருந்தன. அவருடைய இறப்பு ஒரு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர். தன்னை மிகவும் வலுவாக நம்பினார். சாதிய வர்க்கத்துக்கு எதிராகவும், மிகப்பெரிய ஆளுமைகளுக்கு எதிராகவும் திமிருடன் சண்டை செய்தவர். அவருடைய இறப்பை சினிமாவுக்கும், அரசியலுக்கும் மிகப்பெரிய இழப்பாகப் பார்க்கிறேன்” இவ்வாறு பா.ரஞ்சித் தெரிவித்தார்.

Related posts