‘ரஜினி 170’ படத் தலைப்பு ‘வேட்டையன்’

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் டீசர் வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது.

இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது.

தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொடக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. இந்தக் காட்சி படம் ஆக்‌ஷனுக்கான களம் கொண்டதை உறுதி செய்கிறது.

அடுத்தடுத்த ஷாட்டில் லத்தியுடன் நடந்து வருகிறார்.

இந்தக் காட்சி ரஜினி காவலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது.

‘குறி வச்சா இரை விழணும்’ என அவர் பேசும் வசனத்துடன் டீசர் முடிகிறது. கண்ணாடியை அவர் தூக்கி வீசும் ஸ்டைல் கவனம் பெறுகிறது.

முந்தைய ‘ஜெயிலர்’ படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்த ரஜினி இதில் கறுப்பான முடியும், ட்ரீம் செய்த வெள்ளை தாடியுமாக காட்சியளிக்கிறார்.

இயக்குநர் ஞானவேலின் முந்தைய ‘ஜெய்பீம்’ படத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லாத வகையில் ‘மாஸ்’ முயற்சியாக தெரிகிறது.

Related posts