இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞர், யுவதி கைது

சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட போலி விசாக்களை பயன்படுத்தி கத்தாரிலிருந்து இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞர் , யுவதி இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய இளைஞரும் 25 வயதுடைய யுவதியும் நிட்டம்புவ வத்துபிட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை 03.25 மணியளவில் கத்தார் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான அனுமதிக்கான சோதனையின் போது இவர்களது ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சோதனையின் போது விசாக்கள் போலியான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் இந்த போலி விசாக்கள் தரகர் ஒருவரின் உதவியுடன் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாய் படி தலா 80 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts