இலங்கையின் சுற்றுலாத் தரிப்பிட கட்டணங்கள் அதிகம்

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் சுற்றுலாத் தரிப்பிடங்களின் (ஹோட்டல் அறைகள்) கட்டணங்கள் (விசேடமாக கொழும்பை அண்டிய சுற்றுலா ஹோட்டல்கள்) உயர்வாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பிரிவுகள் சிலவற்றின் பணிகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல தலைமையில் நேற்று (21) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செயற்படுகின்றார்.

இதன்போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும் கொன்சியூலர் விவகாரப் பிரிவு (Consular Affairs Division), ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைப் பிரிவு (United nations and Human Rights Division) மற்றும் தேசிய கடல்சார் அலுவல்கள் குழுச் செயலகம் (National Oceanic Affairs Committee Secretariat) என்பவற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, இந்த ஒவ்வோர் பிரிவுகளினதும் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் பணிகள் தொடர்பில் குழுவினால் வினவப்பட்டது. வருகை தந்த அதிகாரிகள் ஒவ்வோர் பிரிவுகள் தொடர்பிலும் குழுவுக்கு விளக்கமளித்தனர்.

அத்துடன், மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையில் இடம்பெறும் மோதல் தொடர்பிலும் வினவப்பட்டது.

மேலும், சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் தொடர்புகள் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் இதன்போது வினவினார். அதற்கமைய, இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகள் பற்றி அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் சுற்றுலாத் தரிப்பிடங்களின் (ஹோட்டல் அறைகள்) கட்டணங்கள் (விசேடமாக கொழும்பை அண்டிய சுற்றுலா ஹோட்டல்கள்) உயர்வாகக் காணப்படுவதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.

இதற்கு மேலதிகமாக, நீர்கொழுப்பு கடற்கரை மாசடைந்த நிலையில் உள்ளமை தொடர்பிலும் இதனால் சுற்றுலா ஈர்ப்புக் குறைவடைவதாகவும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

குழுவின் உறுப்பினர்களான (சட்டத்தரணி) எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் (சட்டத்தரணி) மதுர விதானகே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அத்துடன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts