திரை விமர்சனம்: ரத்தம்

புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளரான ரஞ்சித் குமார் (விஜய் ஆண்டனி), தனது மனைவி இறப்புக்குப் பின் மகளுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். அவருடைய நெருங்கிய நண்பன் செழியன் சென்னையில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்.

தனது வளர்ப்புத் தந்தையும் பத்திரிகை அதிபருமான ரத்ன பாண்டியன் (நிழல்கள் ரவி), அவரை மீண்டும் சென்னைக்கு அழைக்கிறார். வரும் குமார், தனது நண்பனின் கொலைக்கானப் பின்னணியை ஆராயத் தொடங்க, அவருக்குப் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கின்றன. பெரும்புள்ளிகள் தொடர்பு கொண்ட ஒரு டீம், இதுபோன்ற கொலைகளைச் செய்வது தெரிகிறது. அந்த டீம் ஏன் இப்படிச் செய்கிறது என்பதை குமார் கண்டுபிடிப்பதுதான் கதை.

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 மூலம் கவனிக்க வைத்த சி.எஸ்.அமுதன், நகைச்சுவையை ஒதுக்கிவிட்டு சீரியஸ் கதையைத் தந்திருக்கிறார் இதில். வழக்கமாக, க்ரைம் த்ரில்லர் படங்களில், கொலை, கொலையாளி யார்? அதற்குப் பின்னுள்ள ‘மோட்டிவ்’, கொலையாளியை விரட்டி பிடிக்கும் போலீஸ் என்றுதான் கதை நகரும். ஆனால், இதில் ‘ஹேட் கிரைம்’ என்ற புதிய விஷயத்தைவைத்து இன்வெஸ்டிகேஷன் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்த ‘வெறுப்புக் குற்ற’ங்களைப் பேசியதற்காகவும் அதற்காக உளவியல் ரீதியாக இளைஞர்களைத் தேர்வுசெய்து எப்படி அவர்களைத் தூண்டுகிறார்கள் என்பதைச்சொன்னதற்காகவும் சி.எஸ்.அமுதனைப் பாராட்டலாம். ஆனால், இந்த விஷயங்கள் அனைத்தையும் கொண்டதிரைக்கதை, அழுத்தமான தாக்கத்தைத் தர மறுப்பதுதான் படத்தின் பெருங்குறை.

ஒரு புலனாய்வு பத்திரிகை அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் மாதிரி விரைப்பாக இயங்குவதையும் எப்போதும் ஒரே விஷயத்தை மட்டுமே அனைவரும் பேசிக்கொண்டிருப்பதையும் நம்ப முடியவில்லை. ‘ஹேட் கிரைம்’ நடத்தும் மாடர்ன் குற்றவாளிகள் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அவர்களுக்கான நோக்கம், சும்மா ‘கிக்’தான் என்பது ஆயாசம் தரும் ஏமாற்றம்.

சோகமான முகத்துடன் வரும் விஜய் ஆண்டனி, புலனாய்வு பத்திரிகையாளர் கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறார். எடிட்டராக வரும் நந்திதா ஸ்வேதா, அவ்வப்போது சக ஊழியர்களிடம் எரிந்து விழுந்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார். மஹிமாநம்பியார் அதிர்ச்சி தரும் கதாபாத்திரத்தில் ஆச்சரியப்பட வைக்கிறார். அவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் நடக்கும்உரையாடல் அருமை. பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, போலீஸ் அதிகாரிகளாக வரும் ஜான் மகேந்திரன், உதய் மகேஸ் உட்படஅனைவரும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

கண்ணன் நாராயணனின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு உதவுகிறது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தோடு இணைந்து பயணிக்க வைக்கிறது.

கமிஷனர் அலுவலகத்தில் இருந்து ஹீரோ குதிரையில் தப்பிப்பது, குற்றங்களை அரங்கேற்றும் டீமுக்கு வலுவானகாரணம் ஏதும் இல்லாமல் இருப்பது,கிளைமாக்ஸில் கமிஷனர் அலுவலகத்துக்கு மொத்த சர்வரையும் தூக்கிச் செல்வதற்குப் பதிலாக ‘ஹார்ட் டிஸ்கை’மட்டும் எடுத்துச் சென்றிருக்கலாமே? என்பது போன்ற விஷயங்களில் கவனம்செலுத்தியிருந்தால் ரத்தம் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.

Related posts