எதிர்க்கட்சிகள் அரசியல் விளையாட்டு: சித்தராமையா

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டது. தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இதனால் பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் பற்றி மைசூரு நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, இது மிக துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது.

காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு எதிர்க்கட்சிகளும் அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றன. இது வெறும் அரசியலுக்காகவே நடத்தப்படுகிறது.

கர்நாடக மக்களுக்காக அல்ல என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, மழை குறைவாக இருக்கும்போது இரு மாநிலங்களில் நீர் பங்கீடு பற்றி ஒரு தெளிவான தீர்வுக்கான வழிமுறையை சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவேரி நீர் மேலாண் கழகம் இணைந்து கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

Related posts