உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணை ?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலசுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்க தவறியதை தொடர்ந்தே இந்த வாக்குவாதம் இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம்சாட்டியவர்கள் தொடர்பில் ஒருவருடத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம்சாட்டினார்.

ஜனாதிபதி ஆணைக்குழு சிரேஸ்ட பொலிஸ்மாஅதிபர் நிலாந்த ஜெயவர்த்தன குறித்துதனது அறிக்கையில் தெரிவித்திருந்தது அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையைஎடுக்கவேண்டும் என பரிந்துரைத்திருந்தது எனவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரின் பெயரை குறிப்பிடவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

நிலாந்த ஜெயவர்த்தனவை விசாரணை செய்தால் சேர்ந்த பலர் சிக்குவார்கள் அரசாங்கம் நிலாந்த ஜெயவர்த்தனவை விசாரணைக்கு உட்படுத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

———

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்கு சென்று வரும் நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் புதன்கிழமை (20) அதிகாலை பரவலாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த மாவீரன் திலீபனின் தியாகத்தை விற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை துரத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகள் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சுவரொட்டிகளை மன்னார் மாவட்டத்தில் இராணுவ புலனாய் வாளர்களே ஒட்டியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

———

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் திங்கட்கிழமை (18) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு பொலிஸார் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு இலங்கை சோசிலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது என்றும், நடத்தப்படும் பேரணியை 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு புதன்கிழமை (20) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இவ் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதவான் நீதிமன்ற நீதவான் தெரிவித்தார். இவ் வழக்கில் எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி சுகாஷ் ஆஜராகினார்.

……

மூதூர் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குதல் சம்பவத்துக்கு நீதி கோரியும் இன்று புதன்கிழமை (20) மாலை கண்டன போராட்டம் இடம்பெற்றது.

இந்த பேரணியில் கலந்துகொண்ட மக்கள் கட்டைபறிச்சான் இறால் பாலத்தில் இருந்து பேரணியாக மூதூர் மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது தாக்குதல் சம்பவத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts