வீரலட்சுமி மன்னிப்பு கேட்கவேண்டும்: சீமான்

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார்.

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது. இதற்கிடையில், இரு நாட்களுக்கு முன்பு சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார்.

முன்னதாக நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். விசாரணைக்கு சீமானுடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

சீமானிடம் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நானே விருப்பப்பட்டு தான் வந்தேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

சிலரின் தூண்டுதலின் பேரில் தான் என் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. என்னுடைய வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இதை செய்கிறார்கள். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே பெண்ணுடன் தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள். 13 ஆண்டுகள் நான் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன், 8 முறை கருக்கலைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது.

சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களை இப்படி செய்யக்கூடாது. என் மீது களங்கம் ஏற்படுத்த முயன்ற வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Related posts