வைகைப் புயல்’ வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்

ஒரு நடிகனுக்கு உடல்மொழி என்பது மிகவும் இன்றியமையாத அம்சம். வசன உச்சரிப்பு, விதவிதமான ஒப்பனை உள்ளிட்டவற்றைத் தாண்டி பார்வையாளர்களை காட்சியினூடே ஒன்றச் செய்வதில் நடிப்பவர்களின் உடல்மொழிக்கு முக்கிய பங்குண்டு. தமிழ் திரையுலகில் அபாரமான உடல்மொழி கொண்ட வெகுசில நடிகர்களில் ஒருவரும், தனது நகைச்சுவை திறனால் திரையிலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பவருமான வடிவேலு இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

80 மற்றும் 90களில் நகைச்சுவை என்றாலே கவுண்டமணி – செந்தில்தான் என்று இருந்த நிலையில், சிறு சிறு வேடங்களில் நடித்து தனது திறமையை உலகுக்கு காட்டி படிப்படியாக தனக்கென ஒரு இடத்தை நிறுவினார் வடிவேலு. டி.ராஜேந்தரின் ‘என் தங்கை கல்யாணி’யில் ஒரு சிறிய ரோல் செய்திருந்தாலும், ராஜ்கிரண் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில்தான் வடிவேலு வெளியில் தெரிந்தார். அதில கவுண்டமணியிடம் ‘சவுக்கியமான்னு கேட்டது ஒரு குத்தமாண்ணே’ என்று கேட்டு மிதிவாங்கும் காட்சி மிகவும் பிரபலமானது. தனது முதல் படத்திலேயே சிறப்பான உடல்மொழியை வெளிப்படுத்தியிருப்பார்.

கிட்டத்தட்ட நாகேஷுடைய பாணிதான் வடிவேலுடையதும். வடிவேலுவின் நகைச்சுவைகளில் பெரும்பாலும் உருவக்கேலி இருக்காது, ஒப்பீட்டளவில் பிறர் மனம் புண்படும்படியான வசனங்களோ, இரட்டை அர்த்த வசனங்களோ இடம்பெறாது. தன்னை வருத்தி பிறரை சிரிக்கவைக்கும் அவல நகைச்சுவையே வடிவேலுவின் பாணி. நகைச்சுவை ரூட்டில் தனது பயணத்தை தொடங்கிய வடிவேலுவின் நடிப்பாற்றலை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம் ‘தேவர் மகன்’. நகைச்சுவையை தாண்டி தன்னால் குணச்சித்திர வேடத்திலும் ஜொலிக்க இயலும் என்று நிரூபித்தது ‘இசக்கி’ கதாபாத்திரம்.

1996ஆம் ஆண்டு சீமான் இயக்கத்தில் வெளியான ’பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படம் வடிவேலுவின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. அதில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் பெரும் வரவேற்பை பெற்றன. இதில் வரும் ‘சோனமுத்தா போச்சா’ வசனம், போதையில் பாயுடன் சண்டையிடும் காட்சி உள்ளிட்டவை இன்று வரை சமூக வலைதளங்களில் மீம்களாக வலம் வருகின்றன.

வடிவேலுவின் நகைச்சுவை திறனுக்கும், அவரது அபாரமான உடல்மொழிக்கும் தொடர்ந்து வந்த வி.சேகர், டி.பி கஜேந்திரன், ராம.நாரயணன், சுந்தர்.சி, சித்திக் ஆகியோரின் படங்கள் தீனி போட்டன. குறிப்பாக ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ போன்ற படங்களில் வடிவேலுவின் பாடிலாங்குவேஜ் அற்புதமாக வெளிப்பட்டன. குறிப்பாக டி.பி.கஜேந்திரனின் வெளியான ‘மிடில் கிளாஸ் மாதவன்’ படத்தில் ஆட்டோ ஓட்டுநராக வடிவேலுவின் சேட்டைகளை மறக்க முடியாது. பகலில் பெற்றோரின் காலை முத்தமிடும் அளவுக்கு பயபக்தி கொண்ட மகனாகவும், மாலை 6 மணிக்கு மேல் குடித்துவிட்டு அதே பெற்றோரை மிரட்டும் குடிகாரராகவும் கலக்கியிருப்பார்.

மற்ற நடிகர்களுக்கான காட்சியில் திரையின் ஓரத்தில் நிற்கும்போது கூட வடிவேலு வெளிப்படுத்தும் உடல்மொழி வியக்கவைக்கும். ’கண்ணாத்தா’ படத்தில் அவர் ஏற்று நடித்த ‘சுனாபானா’வின் உடல்மொழியை இன்றுவரை பலரது உடல்மொழியாக இருந்துவருகிறது. அதில் வடிவேலு பேசும் ‘சுனாபானா.. இதை இப்புடியே மெயின்டெய்ன் பண்ணிக்க’ என்ற வசனத்தை தங்கள் வாழ்க்கை சூழலில் பேசாதவர்களே இருக்கமுடியாது.

வடிவேலுவின் உடல்மொழி நமக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் எதிரொலிதான் மீம்களில் அவரது முகத்தை நாம் பார்க்கும்போது அந்த மீம் வாசகங்களோடு ஒன்றி வெடித்துச் சிரிப்பதற்கான காரணம். இது வேற எந்த நடிகர்களுக்கு கிடைக்காத வரம். பாகஸர் கிருஷ்ணன், டெலக்ஸ் பாண்டியன், ஸ்டீவ் வாக், கைப்புள்ள, தீப்பொறி திருமுகம், படித்துறை பாண்டி, ஸ்நேக் பாபு, நாய் சேகர், என்கவுண்ட்டர் ஏகாம்பம்.. மேற்குறிப்பிட்ட பெயர்களை படிக்கும்போதே உங்களுக்கு அந்த கதாபாத்திரங்களும் ஒவ்வொன்றாக மனதில் நிழலாடியிருக்கும். அதுவே வடிவேலு நமக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.

ஒரு நிகழ்வில் இயக்குநர் மிஷ்கினிடம் நடிப்புப் பள்ளி மாணவர்களுக்கு யாருடைய படங்களை போட்டுக் காட்டி பாடம் எடுக்கலாம் என்று கேட்டபோது, அவர் தயங்காமல் கூறிய பதில், ‘வடிவேலு’. நகைச்சுவை என்பதில் பேப்பரில் எழுதி ஒப்பிப்பதல்ல. அது ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். அது இயல்பிலிருந்து வரவேண்டும் என்று வடிவேலு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஒரு நகைச்சுவை கலைஞன் என்பவன் கேமராவின் முன்னால் மட்டுமே நகைச்சுவை கலைஞனாக இருக்கக்கூடாது. நிஜ வாழ்க்கையிலுமே அவனது பேச்சுகளில், பாவனைகளிலும் நகைச்சுவை வெளிப்படவேண்டும். வடிவேலுவின் பேட்டிகளிலும் , இசை கச்சேரிகளிலும், பொதுவெளியிலும் வடிவேலுவிடம் இதனை நாம கவனிக்க முடியும்.

அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கி, சில தோல்விகளுக்குப் பிறகு தற்போது மீண்டு வந்திருக்கும் வடிவேலு அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் ஒரு புதிய பரிமாணத்தை காட்டியிருந்தார். ரசிகர்களின் மனதில் வடிவேலுக்கான இடம் அப்படியேதான் உள்ளது என்பதை அந்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு உறுதிப்படுத்தியது. ரத்தத்திலேயே நகைச்சுவை ஊறிய தன்னிகரில்லா கலைஞன் வடிவேலு இன்னும் பல பரிமாணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அவரது இந்த பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

Related posts