சந்திரமுகி 2’ ட்ரெய்லர் எப்படி?

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (செப்.03) வெளியிட்டுள்ளது.

முதல் பாகத்தில் புரியாத புதிராக இருந்த அரண்மனை அண்டகோண்டா பாம்பின் கேமியோவுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. இப்படத்தில் அந்த பாம்புக்கு ஒரு பின்னணி இருக்கும் என்று தெரிகிறது. ‘ராஜாதி ராஜ’ என்று தொடங்கும் கோரஸ் குரலுக்கு மத்தியில் லாரன்ஸின் மாஸ் அறிமுகம், தொடர்ந்து வடிவேலுவின் என்ட்ரி என வரிசையாக நடிகர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

முந்தைய பாகத்தைப் போல அல்லாமல் இதில் கங்கனாவை சந்திரமுகியாக ட்ரெய்லரிலேயே காட்டிவிட்டனர். ராதிகா, ரவி மரியா, ஆர்.எஸ்.சிவாஜி, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, விக்னேஷ் என பெரும் பட்டாளமே நடித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஷாட் வைப்பதிலேயே மொத்த ட்ரெய்லரும் முடிந்துபோகிறது.

Related posts