அதிகாலை பூத்து மணம் வீசிய இந்திய செய்திகள்

இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களை பார்த்து பயந்து போய் நாடாளுமன்றத்தை பாஜக அரசு கூட்டியுள்ளது.

திமுக குடும்பமாக செயல்படுவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதி திட்டத்தை தீட்டி அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள்.

தான் அதிபராக வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு செயல்படுகிறார். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்துவிட்டு தற்போது ஆதரிக்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக ‘பலி கடா’ ஆகும், அது புரியாமல் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியா கூட்டணி என்றாலே பாஜகவுக்கு அச்சம் வந்துவிடுகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவில் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ, இல்லையோ கொள்ளையடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். சட்டசபையில் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் காத்திருப்பீர்களா?.

கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம்.. இது தான் அண்ணா கண்ட திமுக.

யாரின் காலிலும் விழுந்து பதவி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை காப்பாற்றியது போல, நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

———

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியா காந்தி இருப்பதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

——–

ஒரே நாடு, ஒரே தேர்தலை மக்கள் ஆதரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன் விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் அவர் பேசியது: கார்ல் மார்க்ஸை படிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கார்ல் மார்க்ஸை படிப்பதன் மூலம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 20 ஆண்டுகள் ஒரே தேர்தல் தான் நடந்தது. பின்னர், காங்கிரஸ் ஆட்சியில் சில மாநிலங்களில் ஆட்சியை கலைத்ததால் தனியாக தேர்தல் நடக்க ஆரம்பித்து, தற்போது, ஒரே ஆண்டில் 7 தேர்தல்களை நடத்தக் கூடிய நிலை உள்ளது.

தேர்தல் நடத்துவதற்கு 6 மாதத்துக்கு முன்பே ஆட்சியர் முதல் அங்கன்வாடி பணியாளர் வரை கிளம்பி விடுகின்றனர். தேர்தல் நடத்துவதற்கே நேரம் சரியாக உள்ளது. பிறகு எப்படி அரசு அதிகாரிகள் மக்கள் பணியாற்றுவார்கள். அடிக்கடி நடத்தும் தேர்தலால் அரசு அதிகாரிகளின் பணி பாதிக்கப் படுகிறது. அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் முதல் 4 ஆண்டுகள் கொள்ளை அடிக்கின்றன.

அதன் பின் தேர்தலில் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பகுதியை மக்களுக்கு கொடுக்கின்றனர். ஏழை மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாகவே இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் போது இது போன்ற பிரச்சினை இருக்காது. ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

நாடு அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்றால் அடிக்கடி தேர்தல் நடத்தக் கூடாது. 5 ஆண்டுகள் சேவை செய்வதாக இருக்க வேண்டும் என்றார்.

——-

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கி, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக

பொதுக்குழு செல்லாது என உச்சநீதிமன்றம் வரை சென்றும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு வரை சென்றும், அவருக்குசாதகமாக தீர்ப்பு அமையவில்லை.

இந்நிலையில் மக்கள் மன்றமே தீர்வு எனக் கருதி, மாவட்ட வாரியாக தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கும் விதமாக பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓபிஎஸ் நேற்று சந்தித்து, 1 மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப் பயணம் சென்றார். பின்னர் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்தார்.

அதைத்தொடர்ந்து லக்னோவில் உள்ள இந்திய ராணுவத்தின் சூர்யா கமாண்ட் பிரிவு ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர், தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவரை, தற்போது ஓபிஎஸ் சந்தித்துள்ளது மரியாதை நிமித்தமானது எனக் கூறப்பட்டாலும், அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
ஓபிஎஸ் இன்று தனது சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் தொடங்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts