இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி

இலங்கை தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று (30) கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவின் தலைமையில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேசக் கிளைகளினதும் நிர்வாகிகள், மாவட்ட மாதர் முன்னணி மற்றும் வாலிபர் முன்னணி நிர்வாகிகளின் பிரசன்னத்தோடு நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டார்.

‍அத்தோடு, செயலாளராக வீரவாகு விஜயகுமார், பொருளாளராக அன்பழகி செல்வரட்ணம், துணைத்தலைவராக வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, துணைச் செயலாளராக கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக கலைவாணி சிறீகாந்தன், குணலக்சுமி குலவீரசிங்கம், சிவயோகலட்சுமி சந்திரபோஸ், சுபிதா வேலாயுதபிள்ளை, உதயராணி சத்தியசீலன், பரமலிங்கம் பாஸ்கரன், சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், கறுப்பையா ஜெயக்குமார், சின்னையா தவபாலன், சுப்பிரமணியம் சுரேன் ஆகிய பத்து பேர் தெரிவாகியுள்ளனர். இத்தெரிவுக் கூட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் நிருவாகச் செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் நெறிப்படுத்தி நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,

எப்பொழுதும் இல்லா அளவுக்கு தமிழ் மக்கள் இன, மதவாத கருத்துக்களை நாட்டில் ஏற்படுத்தி வருகின்றார்கள். இதனை பல தீவிரவாத தரப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இதன் மூலம் கிளர்ச்சிகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

தமிழர்கள் மீதான மத ரீதியான கிளர்ச்சிகள் தென்னிலங்கையிலும் பாராளுமன்றத்திலும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். எனவே, இதுவரை காலமும் இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு எமது மக்கள் அடையவேண்டிய விடுதலையை பற்றி பேசவேண்டும்.

இதற்காக நாம் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பலருடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் நாம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Related posts