ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை இலங்கை மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமையவேண்டுமென தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் மட்டுப்படுத்துவதை விடுத்து, அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் தொடக்க நாளான 11 ஆம் திகதி இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இருப்பினும் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நியாயபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்ற விமர்சனம் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுவருகின்றது. அதன்படி எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் வலியுறுத்தப்படவேண்டிய காத்திரமான விடயங்கள் குறித்து வினவியபோதே தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அதன்படி இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், இதுகுறித்துக் காத்திரமான தீர்மானம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் அனைத்துத் தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒரேவிதமான கோரிக்கையை முன்வைக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு தசாப்தகாலம் கடந்துள்ள போதிலும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரணை வழங்கியிருந்த போதிலும் அதன்பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் உரிய முறையில் இயங்கவில்லை என்று கவலை வெளியிட்டார்.

மேலும் ‘ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின்படி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய நீதிப்பொறிமுறை உருவாக்கப்படவில்லை. அதேபோன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் செயற்திறனுடன் இயங்கவில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறை ஸ்தம்பிதமடைந்திருக்கிறது. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின் மூலமான அரசியல் தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை. இவ்விடயங்களில் ஏற்கனவே உடன்பட்டதை விடவும் மிகக்குறைந்தளவிலான விடயங்கள் பற்றியே ஜனாதிபதி இப்போது பேசுகின்றார்’ என்று குறிப்பிட்ட சுமந்திரன், எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வில் பேசப்படுகின்ற மற்றும் வலியுறுத்தப்படுகின்ற விடயங்கள் இலங்கைக்கு வலுவான அழுத்தத்தை வழங்கக்கூடியவகையில் அமையவேண்டும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று இதுகுறித்துக் கருத்துரைத்த ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் காட்டமானவையாக இருந்தாலும்கூட அவற்றை இலங்கை அரசாங்கம் பொருட்படுத்துவதில்லை என்றும், எனவே இச்செயன்முறை தொடர்பில் தமிழ்மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்றும் விசனம் வெளியிட்டார். ஆகவே இலங்கை மீதான அழுத்தத்தை மேலும் வலுப்படுத்துவதுடன் அடுத்தகட்டமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறை மாத்திரமே பேரவையின் தீர்மானத்தில் ஓரளவு சிறந்த விடயம் என்று தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இருப்பினும் அது நீதிமன்ற வழக்குகளில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையாகவன்றி, வெறுமனே தகவல்களைத் திரட்டும் பொறிமுறையாகவே இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார். எனவே அப்பொறிமுறையைப் பலப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் மட்டுப்படுத்துவதை விடுத்து, இதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

Related posts