ஜெயலலிதா அரங்கேற்றிய நாடகம்

மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் சேலையை பிடித்து இழுத்து அவமானப்படுத்திய கட்சி திமுக என விமர்சித்து பேசியிருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மு.க. ஸ்டாலின் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டிற்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: கேள்வி: மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பேசிய பிரதமர் அவர்கள் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சந்தர்ப்பவாத, அகங்காரக் கூட்டணி என்று விமர்சித்துள்ளார்.

நடப்பு கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் போதிய விவாதமின்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பிற பாஜக அமைச்சர்களும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பொறுப்பில்லாத கூட்டணி என விமர்சித்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்து? பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களாக பாஜக அரசு மீதும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

அது எதற்கும் பதில் சொல்லவில்லை பிரதமர். மாறாக, தேர்தல் மேடைகளில் பேசுவதைப் போல காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிக் கொண்டு இருந்தார். 2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார். பாஜக அமைச்சர்கள் சிலரே கொட்டாவி விட்ட காட்சிகளை நேரலையில் பார்க்க முடிந்தது. பிரதமர் உரையை யாராவது எடுத்து முழுமையாகப் படித்தால், இது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து ‘எதிர்க்கட்சித் தலைவர்’ மோடி பேசுவதைப் போல இருக்கும்.

பாஜக ஆட்சியை ஒரு வாக்கில் கவிழ்த்த கட்சி அதிமுக. அந்தக் கட்சிக்கு எதிராகத் தான் 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்கு கேட்டார் மோடி. இப்போது அதிமுகவை அருகில் வைத்திருப்பதை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா? கேள்வி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுகையில், 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவர்களின் சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தி.மு.க.வை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

உங்களது பதில் என்ன? நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி.) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது.

எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது, அவையைத் தவறாக வழிநடத்துவது” என்று கூறியுள்ளார்.

Related posts