ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றது மு.க.ஸ்டாலின்

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல்காந்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது. ராகுலை வயநாடு தொகுதி தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அவதூறு வழக்கில் அன்புச் சகோதரர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம்.

இந்த முடிவு, நமது நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Related posts