பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன், ஜனாதிபதி ரணிலுடன் இன்று பேச்சு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் நேற்று (28) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் காலநிலை மாற்றம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், இலங்கை கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்களில் ஏற்படும் எரிபொருள் கசிவு தொடர்பாக கண்காணிப்பை மேற்கொள்வதற்காக செய்மதி தொழில்நுட்பத்தை பிரான்ஸிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாக அந்த நாட்டுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையின் போது முக்கிய கவனம் செலுத்தப்படுமென, அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்த பிரான்ஸ் ஜனாதிபதி, இன்று பிற்பகல் இலங்கையிலிருந்து மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பப்புவா நியூகினியா மற்றும் வனாடு ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு பிரான்ஸுக்கு திரும்ப முன்னராக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், இன்றையதினம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக தனது நாட்டுக்கு திரும்பவுள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Related posts