முக்கிய குற்றவாளிகள் கைது

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் நேற்று தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அந்த வீடியோ காட்சிகளை நீக்கும்படி ட்விட்டர் இந்தியாவுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
மணிப்பூரில் மைத்தேயி இனமக்கள் 53 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கின்றனர். குகி மற்றும் நாகா பழங்குடியினத்தவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், மைத்தேயி மக்களும் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினத்தவர்கள் கடந்த மே 3-ம் தேதி ஒற்றுமை பேரணிநடத்தினர்.
இதில் பழங்குடியினத்தவர்களுக்கும், மைத்தேயி இனத்தவர்களுக்கும் வன்முறை வெடித்து மாநிலம் முழுவதும் பரவியது. பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். மணிப்பூரில் 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்த வன்முறை சம்பங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த மே 4-ம் தேதி, மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றனர்.
அவர்களில் இரு பெண்களை ஆடையின்றி, மானபங்கம் செய்தபடி கிராமத்துக்குள் ஊர்வலமாக இளைஞர்கள் அழைத்துச் சென்றனர். அதில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். தங்களை விட்டு விடும்படி அந்த இளைஞர்களிடம் பழங்குடியின பெண்கள் கெஞ்சினர். இச்சம்பவத்தை தடுக்க முயன்ற ஒரு பழங்குடியின இளைஞரையும் அவர்கள் கொலைசெய்தனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையதலைவர் ரேகா சர்மா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
மணிப்பூரில் நடந்த சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் கண்டிக்கிறது. இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மணிப்பூர் டிஜிபியிடம் கூறினோம். இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும், மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். மணிப்பூர் வீடியோ காட்சியை ட்விட்டரில் இருந்து நீக்க ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு ரேகா சர்மா கூறினார்.
மணிப்பூர் வீடியோ சம்பவம் வெளியான பின்பு, மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் உள்ள நாங்போக் செக்மாய் காவல் நிலையத்தில், அடையாளம் கண்டறியப்படாத ஆயுத கும்பல் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவில் தெரியும் முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் சிறப்புப் படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூர் வீடியோ சம்பவம் குறித்து மாநில முதல்வர் பிரேன் சிங்குடன் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார். இச்ம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெறுவதாகவும், இதில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது எனவும் அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.
அமித் ஷா உத்தரவு: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்குடன் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் வீடியோ சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிக சிறிது, மிக தாமதம்: மணிப்பூர் சம்பவம் பற்றி பிரதமர் மோடி கூறியது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
புரிந்துகொள்ள முடியாத, மன்னிக்க முடியாத 1800 மணி நேரத்துக்கும் மேலான அமைதிக்குப் பின்பு, மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மொத்தம் 30 வினாடிகள் பேசியுள்ளார். அரசின் தோல்விகளை மறைக்கவும், மணிப்பூர் மனிதத் தன்மையற்ற சோக சம்பவத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி பேசுகிறார். மணிப்பூரில் நடைபெறும் இனக் கலவர விவகாரத்திலிருந்து பிரதமர் மோடி முற்றிலும் விலகிச் செல்கிறார்.
மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இப்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மிகவும் சிறியது மிகவும்தாமதமானது. வெறும் வார்த்தைகளால் எதுவும் நடக்காது. செயல்கள் மூலம் பேசவேண்டும். இச்சம்பவத்துக்கான பொறுப்பிலிருந்து பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தப்ப முடியாது. மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
ப.சிதம்பரம் கண்டனம்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘முதலாவதாக மணிப்பூரில் பிரேன் சிங் ஆட்சியைபிரதமர் மோடி கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் இப்போதுதான் தனது அமைதியை கலைத்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் செய்யும்போதெல்லாம் அவர் மணிப்பூர் மக்கள் பற்றி நினைக்கவில்லை. பெண்களுக்கு எதிராக நடந்த கொடூர சம்பவத்தால் மணிப்பூர் பற்றி அவருக்கு ஞாபகம் வந்ததா? அல்லது உச்ச நீதிமன்ற எச்சரிக்கை காரணமா?’’ என குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை: மணிப்பூர் சம்பவம் குறித்து முதல்வர் பிரேன் சிங் அளித்துள்ள பேட்டியில், ‘‘மனிதத் தன்மையற்ற செயலுக்கு உள்ளான இரண்டு பெண்களையும் நினைத்து வேதனைப்படுகிறேன். வீடியோ வெளியானவுடனே போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, முதல் நபரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை உறுதி செய்யப்படும். அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற கொடூர செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை’’ என்றார்.

Related posts