பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை

தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவில் அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காலை முதல் மாலை வரை 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து பொன்முடியை அவரது காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தனி அறையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அவரது வீட்டில் இருந்து ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு கார் ஆகியவற்றையும் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இரவு 8 மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை இன்று அதிகாலை 3 மணியளவில் நிறைவடைந்தது. தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் நிறைவடைந்தன.
இதன்படி நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை 19 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்தநிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:- அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். நேற்று இரவு தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 3.30 மணிக்கு நிறைவடைந்திருக்கிறது. அவருக்கு வயது 72. அவருக்கு சில உடல்நலக்குறைவும் இருக்கிறது. இப்படித்தான் மனிதாபிமானமற்ற முறையில் அதிகாரிகள் விசாரிப்பார்களா?
அவருக்கு மன உளைச்சலை, உடல் உளைச்சலை இது ஏற்படுத்தியிருக்கும். இப்படி செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு சொல்லியிருக்கிறது. இந்த ஸ்டேட்மெண்டை மறுநாள் காலை வாங்கினால் என்ன ஆகிவிட போகிறது?
ஆதாரங்கள் ஏதாவது அழிந்துவிடவா போகிறதா? இது அமலாக்கத்துறை அலுவலகமா, சித்ரவதை கூடமா? தி.மு.க. அமைச்சர்கள் மீது 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட வழக்குகள் தான் இவர்கள் கண்ணுக்கு தெரிகிறதா?
கடந்த 10 ஆண்டு அதிமுக அமைச்சர்கள் செய்த தவறுகள் தெரியவில்லையா? கவர்னர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து கொள்கை ரீதியாகவும், அரசு ரீதியாகவும் எதிர்த்து வந்தவர், பொன்முடி.
கவர்னர் ஒருவாரம் டெல்லி சென்றார். இப்போது அமலாக்கத்துறை வந்து நிற்கிறது. 2007-ம் ஆண்டு நடந்த வழக்குக்கு, 2023-ம் ஆண்டில் விசாரணை நடத்தினால் எந்த ஆதாரம் கிடைக்கும்?
இது யாரை ஏமாற்றும் வேலை? இருந்தாலும் அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர் பொன்முடி தெளிவான பதில்களை கொடுத்திருக்கிறார். அவர் இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆகிறார் என கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts