காலத்தின் வரலாறு கந்தசாமி அண்ணன் : புகழ் அஞ்சலி

காலத்தின் வரலாறு கந்தசாமி அண்ணன்

அமரர் திரு. மு.சி. கந்தசாமி
புகழ் அஞ்சலி
தோற்றம் : 31.12.1937 மறைவு 05.07.2023

டென்மார்க் கேர்னிங் நகர் புது தோற்றம் கொண்டது..
இலங்கையின் சகல பாகங்களின் மக்களையும் அரவணைத்தது..
இந்த நகரின் அழிக்க முடியாத அடையாளமாக
வாழ்ந்து விடை பெற்றிருக்கிறார் அண்ணன் மு.சி.கந்தசாமி..

அதிகாலை நேரம் அமைதியாக போகும் அவரின்
மிதி வண்டி, அதில் ஆயிரம் சிந்தனைகளோடு அவர்..
எப்போதும் தன்னைப்பற்றியும் தன் குடும்பம் பற்றியும்
அவர் பேசுவதே இல்லை.. மூச்சும் பேச்சும் சமுதாயமே..

தன்னுடைய கொள்கையில் நேர்த்தியான உறுதி அவரிடம்
அதை என்றுமே எதற்காகவும் விட்டுக் கொடுத்து பிறரிடம்
சமரசம் காணாத, ஊழலற்ற ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்..
இந்த நகரில் அவரை விளங்க யாரும் இல்லாத வெளி..

இலங்கையின் புகழ் பெற்ற இடதுசாரி சிந்தனையாளர்
இடதுசாரிகளை ஒரே முகமாகத் தெரிந்த வடிவம்..
மனிதனாக வாழ்வதற்குரிய போராட்ட வரலாறு அவர்
கருத்துக்களால் நிறைந்த அவரை புரிவது கடினம்தான்.

சமுதாயத் தவறுகள் அத்தனையும் மாற்றமில்லா வாழ்வு
ஆனால் சிறிதாவது திருத்திவிட அவர் நடத்தியது போர்..
ஒரு பெரும் மலையை சிற்றுளியால் செதுக்கிய சிற்பி..
இதற்குள்தான் அழகிய சிற்பம் மறைந்திருப்பதைக் கண்டவர்.

அவரின் மிதி வண்டி சில ஆண்டுகளாக வீதியில் இல்லை
வீடு தேடிப் போனேன் உடல் நிலை பற்றி பேசினார்..
அத்தருணம் அவர் மாறியிருந்தார், வயோதிபத்தின் தளர்வு..
ஆயினும் மன உறுதி குலையாமல் பேசினார்..

விடை பெற்றபோது ஓஸோ எழுதிய ஒரு புத்தகத்தை
கையில் தந்தே பல விடயங்களை சொன்னார் – அவை
அவர் மரண வாக்கு மூலம் போலவே இருந்தன..
அவர் சொன்னதெல்லாம் நாம் கடக்க வேண்டிய பாதை..

சொல்லிவிட்டு அந்தப் போராளி விடைபெற்றுவிட்டார்..
இந்த நகரில் ஓடிய சீர்திருத்த மிதிவண்டி நின்றது
கடந்த நாற்பது வருடங்களாக காலத்தை சரியாக
காட்டிய காலக் கடிகாரம் மெல்லென நின்று விட்டது..

கடிகாரம் நின்று விட்டாலும் மனதில் எங்கோ ஒரு
மூலையில் அதன் ஒலி அமைதியாக கேட்கும்..
கடிகாரத்தை நிறுத்தலாம், அது நின்றும் போகலாம்..
ஆனால் அதன் ஒலியை யாராலும் நிறுத்த முடியாது..

இன்று அவர் இல்லாத கேர்னிங் வீதிகளைப் பார்க்கிறேன்
அந்த மனிதனை அது தேடுகிறது வாஞ்சையுடன்
எத்தனையோ டேனிஸ் சாதனையாளர் போன வீதி இது
இந்த சாதனையாளனுக்காகவும் நகரம் தலை சாய்க்கிறது..

தான் வாழ்ந்த நிலத்தையும் புதிய காற்றையும் தழுவிய
ஆகாயத்தையும் பெருமைப்படுத்தி விடை பெற்றார்..
கந்தசாமி அண்ணன் மனதில் கறுப்பில்லா மகத்தான மனிதர்
இதோ பூமியில் பூத்த பூக்கள் எல்லாம் அவரை அஞ்சலிக்கின்றன..

அமரர் மு.சி. கந்தசாமி அவர்களுக்கு புகழ் வணக்கம்..
கி.செ.துரை
அலைகள் 07.07.2023

———

Related posts