ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம்

விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று (28) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. உத்தேச தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதுடன், இதற்கான திட்டத்தை இன்றைய அமைச்சரவையில் சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்றை நடத்துவதற்கும் ஏற்பாடாகியுள்ளது.

அதேவேளை, பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று நடைபெறவிருந்த பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக்குழுக் கூட்டம் எதிர்வரும் (30) ஒத்திப்போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அக்கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 9.00 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான யோசனைக்கு பாராளுமன்ற அனுமதியை பெற்றுக் கொள்ளும் நோக்கில், எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts