காலத்தால் அழியாத காவிய பெண் ருக்மணி டீச்சர்..

காலத்தால் அழியாத காவிய பெண் ருக்மணி டீச்சர்..

ருக்மணி டீச்சர் இறந்துவிட்டார் என்ற செய்தியை எனது மாணவி திருமதி அசோதா ராமதாசன் மூலம் அறிந்தேன். என் மனதில் இறப்பில்லாமல் வாழும் மனிதர்களில் ருக்மணி டீச்சர் ஒருவர். அவர் எப்படி இறக்க முடியும் எனக்கு தெரியாமல்.. உள்ளம் சுழன்றது.

வல்வை சிதம்பராவில் படித்த காலத்தில் திருமதி, அழகம்மா, திருமதி கமலா பெரியதம்பி வரிசையில் நமது ஆங்கில ஆசிரியர் திருமதி ருக்மணி டீச்சர்.

பின்னர் நான் வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்தபோது அவரே அதிபராக இருந்தார். அக்காலம்தான் அவர் வல்வையில் ஓர் அதிசயப் பெண் என்பதை அறியும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் நான் கண்ட சிறந்த ஆளுமையுள்ள அதிபர் திருமதி ஆனந்தகுமாரசாமி போல அவர் காலத்தில் வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தில் தலை சிறந்த நிர்வாகம் செய்து சரித்திரம் படைத்தவர் எங்கள் அதிபர் ருக்மணி டீச்சர் அவர்கள்.

ஆசிரியரின் திறமையை கண்டு பிடித்து பணியை வழங்குவதில் அவருடைய ஆற்றலே அவர் வெற்றியின் இரகசியமாகும். நான் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை முடிந்ததும் சிதம்பரா செல்ல விரும்பினேன், ஆனால் மகளிர் மகாவித்தியாலயத்திலேயே இடம் இருந்தது.

போன பின்னரே தெரிந்தது அங்கு நமக்கு மிகப்பெரிய பணிகள் காத்திருப்பது. முதலில் இந்தப் பாடசாலையில் இருந்து மாணவிகளை பல்கலைக்கழகம் அனுப்ப வேண்டும். ஏ.எல் வகுப்பை வைத்திருக்கிறோம் ஆனால் பல்கலை கழகத்தை தொட முடியவில்லை. இந்தக் குறைபாடு சிதம்பராவிலும் நமது காலத்தில் இருந்தது.

இது பற்றி எனது வருத்தங்களை ருக்மணி டீச்சருடன் உட்கார்ந்து பேசினேன், துணையாக திரு. செ. வீரகுல சிங்கம் மாஸ்டரும் இணைந்து கொண்டார். ஏ.எல் வகுப்பிற்கு என்னை கற்பிக்க அனுப்பினார், ஓராண்டுதான் பல மாணவிகள் பல்கலைக்கழகம் போக தெரிவானார்கள். இன்று புகழுடன் இருக்கும் பல மாணவிகள் அந்த வரிசையில் வந்தவர்களே.

பின்னாளில் நான் டென்மார்க் அரச பாடசாலைகளின் ஆசிரியராக இருந்தபோது, பாடசாலையை சுத்தமாக வைத்திருக்க டேனிஸ் அரசு பெரும் பணம் செலவிட்டதை பார்த்தேன். டேனிஸ் பாடசாலை அதிபர்களிடம் ருக்மணி டீச்சரின் சேவையை எடுத்துரைத்து, ஒரு ரூபாய் கூட அரசு கொடுக்காவிட்டாலும், மாணவர்களை வைத்து சுத்தமான கோயில் மூலஸ்தானம் போல பாடசாலையை பேணிய அவர் ஆற்றலை அவர்களிடம் கூறுவேன்.

பாடசாலையின் முழு ஆசிரியர்களும் அது தமது சொந்தப் பாடசாலை போல எண்ணிப் பணியாற்றுவது எப்படி என்ற கேள்விக்கு, அவர்கள் தந்த பதில் பாரபட்சமற்ற நம் அதிபரின் நிர்வாக திறனே காரணம் என்பதாகும்.

அந்த நாள் போனதம்மா ஆனந்தம் போனதம்மா..

அந்த அழகான வாழ்க்கை குலைந்து போக, போர் வந்தது. இராணுவம் அன்றாடம் ரோந்து போனது. படிப்பித்துக் கொண்டிருக்கும் போதே இராணுவ கெல்மெட் வகுப்பறையில் தெரியும். கடற்படை பாடசாலையை தாக்கி கட்டிடமே ஓர் நாள் உடைந்து போனது.

இத்தகைய ஒரு நெருப்பு வளையத்தில் மாணவிகளை, அதுவும் இளம் பெண்களை எப்படி காப்பாற்றுவது கடினமான காரியம். ஒரு தாய் போல உயிர் கொடுத்து அந்தக் கடமையை செய்தார். ஒரு நாள் அதிகாலை 90 பேர் சுடப்பட்டு கிடந்த காட்சியை கண்டோம்.

ஒரு நாள் இராணுவம் என்னை கைது செய்து விடுதலையாகியிருந்தேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார் நீர் இங்கு இருப்பது இனி பாதுகாப்பு இல்லை என்றார். அவர் அனுமதியுடன் வெளிநாடு புறப்பட்டேன் விரைவில் திரும்புவேன் இந்த பாடசாலைக்கே பணிக்கு வருவேன் என்று விடைபெற்று டென்மார்க் வந்தேன்.

ஆனால் இன்று வரை திரும்ப முடியவில்லை. இனி ஆசிரியராக இருக்கவும் முடியாது, ருக்மணி டீச்சரை காணவும் முடியாது.. இப்படியொரு நாள் வருமா.. இந்த நாளை வந்த நாளில் மறந்து போனோமே..மனம் அழுகிறது.

ஆனால் அவர் இறக்கவில்லை என்ற அதிசயத்தை வெளிநாடுகளில் கண்டேன். எனது வாழ்வின் வெற்றியே வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தில் பணியாற்றிய காலமே என்பதை அத்தருணம் உணர்ந்தேன்.

எனது திரைப்படங்களை காண்பிப்பதற்கு உலகின் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். வீட்டுத் தலைவர் 100 குறோணர் டிக்கட் போதும் என்று கூறுவார். குசியினில் இருந்து ஒரு சத்தம் கேட்கும் இல்லை 500 குறோணர் டிக்கட் எடுங்கள் என்று. என்ன ஆச்சரியம் என்று எட்டிப் பார்ப்பேன். அங்கு எமது வல்வை மகளிர் மகாவித்தியாலய மாணவி குடும்பத்தலைவியாக இருப்பதை காண்பேன்.

இப்படி எனது பணிகளை எல்லாம் வெற்றியாக்கும் பெண் சக்திகளாக இந்த மாணவிகள் வலம் வருவதை காணும் போதெல்லாம் ருக்மணி டீச்சரே நினைவுக்கு வருவார். அவர் ஒரு பெண் தெய்வமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒளி கொடுக்கிறார். அதை அனுபவித்தாலே புரியும்.

சில வருடங்கள் முன் எனது புத்தகம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியீடு, வழமைபோல பகிஸ்கரிக்க தூண்டுகோல் இருந்தது. ஆனால் என்ன அதிசயம் மண்டபம் நிறைந்துவிட்டது, வல்வை மகளிர் வித்தியாலய மாணவிகள் பேருந்து வண்டிகளில் வந்து நிறைந்துவிட்டார்கள். எதிரிகள் வெட்கி தலை குனிந்தார்கள், உனக்கு இப்படியொரு சக்தி இருக்கிறதா என்று அந்த மேடையிலேயே ஒருவர் காலில் விழுந்து வணங்கினார். அப்போது என் உள்ளம் வணங்கியது வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தையே.

இப்படி இன்றும் அந்தப் பாடசாலை மாணவர் உள்ளங்களில் எல்லாம் ஒரு பெண் தெய்வம் போல வாழ்ந்து ஒளி கொடுப்பவர் ருக்மணி டீச்சர் அவர்களே. இலங்கை போனால் வல்வை மகளிர் மகாவித்தியாயம் போகாமல் நான் திரும்புவதே இல்லை, இன்றும் அதுதான் வழமை.

வல்வை மண்ணில் புகழ்மிக்க ஒரு பெண்மணியை கூறு என்றால் என்னால் பலரை கூற முடியும் அவர்களில் முதன்மையானவர் எங்கள் ருக்மணி டீச்சரே.

அவருக்கு இறப்பில்லை..

அவர் மாணவிகள் எல்லாமே அவரைப் போல திறமையான தலைவிகளாக வலம்வரக் கண்டு ஆனந்தமடைகிறேன். அத்தகைய சாதனையை படைத்து விடை பெற்றிருக்கிறார். வாழ்க அவர் புகழ்.

கி.செ.துரை டென்மார்க் 01.06.2023
முன்னாள் ஆசிரியர் வல்வை மகளிர் ம.வி.

Related posts