புதிய நாடாளுமன்றம் திறப்பு

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திறப்பு விழா 2 கட்டங்களாக நடைபெற்றது. காலையில் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

முன்னதாக செங்கோல் முன் பிரதமர் மோடி தரையில் விழுந்து வழங்கினார். அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். செங்கோலை நிறுவிய பின்னர் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர். செங்கோலை வைத்த பின்னர் ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார் அதையடுத்து நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

அதன் பின்னர் நாடாளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார். அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், நீதிபதிகள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அதிமுக, பாமக, பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் உள்ளிட்ட 25 கட்சிகள் கலந்து கொண்டன. 19 கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளனர். அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “நாடாளுமன்றத்தை வாஸ்து, சம்பிரதாயம் உள்ளிட்ட அனைத்தையும் பின்பற்றி கட்டி எழுப்பியுள்ளோம்.

வருங்காலத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என்பதால் அதை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்களின் உயிர்தான் இந்த நாடாளுமன்றம். செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு நன்றி” என்று கூறினார்.

Related posts