வங்கிகளுக்கு கூட்டம் வரவில்லை- காரணம் என்ன?

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த 19-ந் தேதி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டுகளை நேற்று முதல் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றி கொள்ளலாம் என தெரிவித்து இருந்தது.
ஒரு நாளில் ரூ.20 ஆயிரம் வரை எந்த அடையாள அட்டை இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்றும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற விரிவான ஏற்பாடுகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. இதன்படி நேற்று மும்பை நகரில் உள்ள வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற கூடுதல் கவுண்ட்டர்கள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நீண்ட வரிசை ஏற்படும் பட்சத்தில் குடிநீர், சிற்றுண்டி போன்ற ஏற்பாடுகள் வங்கிகள் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு வங்கிகளுக்கு கூட்டம் வரவில்லை. மிககுறைந்த எண்ணிக்கையில் தான் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வாடிக்கையாளர்கள் வருகை தந்தனர். அதிகாரிகள் விளக்கம் இது பற்றி இந்தியன் வங்கி தாதர் மேற்கு கிளை தலைமை மேலாளர் ஹிமான்சு சிங் கூறுகையில், “இது வரையில் எங்கள் கிளையில் நோட்டுகளை மாற்ற 6 பேர் மட்டும் வந்து உள்ளனர்.
ஒரே நேரத்தில் 2 ஆயிரம் நோட்டுகள் 10 எண்ணிக்கை அளவில் மட்டும் மாற்ற அனுமதி அளித்து உள்ளதால் வருகிற நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்றார். காந்திவிலி பாங்க் ஆப் பரோடா வங்கி அதிகாரி கூறுகையில், “நேற்று காலை முதல் 17 பேர் மட்டும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வந்தனர். மற்ற கிளைகளிலும் இதே நிலைமை தான் நீடித்தது. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் குழப்பம் ஏற்படாமல் இருக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் தெளிவுப்படுத்தி இருந்தோம்.
மே மாதம் விடுமுறை காலமாக இருப்பதால் ஏராளமான மும்பை வாசிகள் வெளியூர் பயணத்தில் உள்ளனர். வரும் நாட்களில் அதிக பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Related posts