எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இழப்பீடு வழங்குவதில் இடையூறு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இல்லாத விடயங்களை காட்டி போராடினால் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்தப் பிரச்சினையை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து எரிந்து நாசமடைந்ததன் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான மீனவ மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (17) இதனைத் தெரிவித்தார்.

இந்த கப்பல் விபத்து காரணமாக மீனவ மக்களுக்கு 27 பிரிவுகளின் கீழ் மூன்று கட்டங்களாக சுமார் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை நான்காம் கட்ட இழப்பீடு வழங்கப்பட்டது. இங்கு கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட 300 மீனவர்களுக்கு அமைச்சர் இழப்பீடு வழங்கினார்.

நீர்கொழும்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியதாவது:

எக்ஸ்பிரஸ் பேர்ல் மற்றும் நியூ டயமண்ட் ஆகிய இரண்டு கப்பல் விபத்துகளால் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதம் மிகப்பெரியது. கப்பல் விபத்துக்கள் எங்களுக்கு ஒரு புதிய அனுபவம். எனவே, நியூ டயமண்ட் கப்பல் விபத்து தொடர்பாக எங்களுக்கு அரசு தர வேண்டிய இழப்பீடு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் பேர்ல் எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்துக்குப் பிறகு பொருளாதாரச் சிக்கலில் சிக்கிய குழுக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ முடிந்தது.

இந்த கப்பல் விபத்துகளை கையாளும் மீப்பா நிறுவனம் எனது அமைச்சின் கீழ் உள்ளது.அந்த நிறுவனத்தின் ஆலோசனைக் குழு மூலம் எங்களுக்கு தகவல் கிடைக்கிறது. முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நட்டஈட்டைப் பெற்றுக்கொடுக்க கடுமையாக உழைத்தனர்.

ஆனால் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை சில குழுக்கள் தடுக்க முயன்றன. தகுதியில்லாதவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது என எங்களுக்கு கடிதம் அனுப்புகின்றனர். நாங்கள் சண்டை பிடித்தால் கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க நேரிடும். நாங்கள் இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இல்லாததை காட்டி குறை கூறி பொய்யான கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி பணம் கிடைக்கும் என்பது எங்களுக்கு சந்தேகம். இதை நிறுத்துமாறு கப்பல் நிறுவனம் சொன்னால் யாருக்கு நஷ்டம். மீனவர்கள் உங்களுக்குத்தான். வங்கியில் பணம் போடும் போது பணத்தை இழந்தது யார் என்று தெரியவில்லை. அது பெரிய பிரச்சினை. எனவே இழப்பீடு வழங்கும்போது உரியவர்களை அடையாளம் காணுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தினேன். எக்காரணம் கொண்டும் பொருத்தமில்லாதவர்கள் இருப்பின் அவர்களை நீக்கிவிட்டு பொருத்தமானவர்களுக்கே பணத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினேன். நாம் ஒற்றுமையாக இருந்தால் இதை வெற்றி கொள்ளலாம். பிளவுபட்டால் இதை சாதிக்க முடியாது.

அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நீங்கள் அறிவீர்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் நாம் எங்கிருந்தோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இது கோத்தபாய ராஜபக்ஷவின் அல்லது இந்த அரசாங்கத்தின் பிரச்சினை என்று பலர் காட்ட முயல்கின்றனர். சர்வதேச சமூகத்திற்கு நாம் செலுத்த வேண்டிய பணத்தை விட யுத்தத்தினால் நாம் இழந்த தொகை அதிகம். நாடு வெள்ளைக்காரர்களின் பிடியில் இருந்து விடுபடாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். வெள்ளையரிடம் இருந்து அரசு விடுதலை பெற்ற போது ஒரே ஒரு பாடசாலைதான் இருந்தது. இன்று அதை விட அதிகமாக உள்ளது. நாட்டை ஆண்ட ஒவ்வொரு அரசும் நாட்டை அபிவிருத்தி செய்ய முயன்றது. ஆனால், போர், இயற்கைப் பேரிடர்கள், 71, 83, 88, 89 கலவரங்களால் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பல பாதிப்புகள் ஏற்பட்டதே தவிர, இலாபம் கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் பின்னுக்குச் சென்றோம்.

அரசு சில வேலைகளைச் செய்கிறது, ஆனால் எங்கள் சொந்தக் குழு அதை அழிக்கப் பார்க்கிறது, நாங்கள் வீதிகள் அமைக்கும்போது 10 சதவீதம் கொமிஷன் வாங்குகிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். வீதி அமைக்காவிட்டாலும் ஏசுகிறார்கள். அது எங்கள் ஆட்களின் இயல்பு. அரசிடம் பணமில்லை. இவை இரண்டும் கப்பல் நிறுவனங்களின் பணம். இந்த இரண்டு பேருக்கும் இது நான்காவது முறை, வாய்ப்பு கிடைத்தால் இன்னும் ஏதாவது கொடுக்க முயற்சிப்போம். இந்தப் பணத்தை அரசு வைத்திருக்கவில்லை.

மேலும், கொரோனா பாதிப்பால் எங்களால் கிராமங்களுக்கு வரமுடியாமல் போனது. அதனால் பணம் கொடுத்து பணம் பெறுவதற்காக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டு சும்மா இருந்தவர்கள் புள்ளிகளைப் பெற முயல்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட செயலாளர் திரு.சமன் தர்ஷன பாடிகோரள அங்கு தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் எரிந்ததால் மீனவ மக்களுக்கும், நாட்டின் கரையோர சுற்றுச்சூழலுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டது. குறிப்பாக இச்சம்பவத்தால் மீனவ சமூகம் மற்றும் கரையோர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில காலமாக இழப்பீடு கிடைக்கவில்லை என பேசப்பட்டது.இதுவரை கிட்டத்தட்ட 1000 மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை உங்களுக்கு வழங்க அரசு கடுமையாக உழைத்து வருகிறது. இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ள அழைத்தவர்களில் சிலர் இன்று வரவில்லை. இது வருத்தம் அளிப்பதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஹன் பிரதீப் விதான, நீர்கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் தயான் லான்சா, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயேஷ் பத்திரன, முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts