சிறைச்சாலைகளில் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் பௌர்ணமி மத அனுஷ்டான தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 988 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவிற்கு அமைய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளையும் உள்ளடக்கியதாக 982 ஆண் கைதிகள் 06 பெண் கைதிகள் ஆகிய 988 பேர் இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படுகின்றனர்.

சிறு குற்றங்களுடன் தொடர்புடையோர், தண்டப் பணம் செலுத்த முடியாதோர், தண்டனைக் காலம் நிறைவடையவுள்ளோர் உள்ளிட்டோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது தவிர, தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு சிறையில் அவர்கள் கழிக்கும் ஒரு வருடத்திற்கு அல்லது அதன் பகுதிக்கு 14 நாட்கள் பொதுமன்னிப்பு வழங்குதல், அபராதம் செலுத்தாமை காரணமாக, இன்று வரை தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் மிகுதியை இரத்துச் செய்தல், அபராதம் உட்பட 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இன்று வரை 20 வருடங்களை பூரத்தி செய்துள்ள கைதிகளின் எஞ்சிய காலத்தை இரத்து செய்யும் நடவடிக்கை இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

18 அல்லது அதற்கும் குறைவான வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் ஆயுள் தண்டனையை 15 ஆண்டுகளாகக் குறைத்தல், போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் இன்றுவரை புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட கைதிகளின் புனர்வாழ்வுக் காலத்தில் பாதி அல்லது அதற்கு மேல் பூர்த்தி செய்தவர்களுக்கு, 1999 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க சட்டத்தின்படி, எஞ்சியிருக்கும் கைதியின் மறுவாழ்வுக் காலத்தை சமூக சீர்திருத்த அலுவலரின் மேற்பார்வையின் கீழ் செலவிடுவதன் அடிப்படையில் அதனை இரத்துச் செய்யவும் இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம், சலுகை
இதேவேளை, வெசாக் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் தங்கள் உறவினர்களை பார்வையிட இன்றும் (05) நாளையும் (06) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த இரு தினங்களிலும் கைதிகளின் உறவினர்கள் ஒருவருக்கு மாத்திரம் அவர் கொண்டு வரும் உணவுப் பொதி மற்றும் இனிப்புகளை வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், உரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கமைய, கைதிகளை பார்வையிட வருவோருக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts