புதிய பயங்கரவாத தடை சட்டத்தால் பெரும் ஆபத்து

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி புதிய சட்டத்தை கொண்டுவர முயற்சித்தால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாமல் போகுமென்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

வடமராட்சியில் (08) ஊடகங்களுக்கு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய பொருளாதாரச் சிக்கல் ஒன்று இந்த நாட்டை பீடித்திருக்கின்றது. அதிலிருந்து இந்த நாட்டை மீட்க போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார். அவ்வாறு நாடு மீண்டதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

ஆனால் மிக விரைவிலே நாடு மிக மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு செல்ல இருக்கிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் திரும்பவும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அதை கட்டுப்படுத்துவற்கு இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர். ஏனெனில் கடந்த காலங்களைப் போன்று மீண்டும் மக்கள் போராட்டங்கள் ஏற்படுகின்ற பொழுது அதனைக் கட்டுப்படுத்த அல்லது ஒடுக்குவதற்கு தற்போது ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற சட்டங்கள் போதாது என்று அவர் கருதுகின்றார்.

அதேபோன்று, பயங்கரவாத தடை சட்டங்களை பிரயோகித்தால் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக அமையும் என்பதாலே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொடுக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை கூட இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும். ஆகவே புதியதொரு நல்ல விடயத்தை தாங்கள் செய்வது போல மிக மிக மோசமான ஒரு செயலையே செய்வதற்கு முனைகின்றனர்.

குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக காட்டிக் கொண்டு அதனை விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமென்ற இந்தச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறேன் என்று ஒரு மாயத் தோற்றத்தை காட்டிக் கொண்டும் சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய சட்டத்தையே கொண்டு வருகிறேன் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

Related posts