எடப்பாடிக்கு “மெகா” வெற்றி…!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்.

தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்கினார் அதன் விவரம் வருமாறு : அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை எந்த ஒரு காரணமும் இல்லாமல், விளக்கம் எதுவும் கேட்காமல், கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது. நியாயமற்றது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி விட்டு, பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தலை நடத்துகின்றனர்.

ஒருவேளை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றால், ஓ.பன்னீர்செல்வம் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருப்பார். அவர் போட்டியாக வரக்கூடாது என்பதால் திட்டமிட்டே, பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி, கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.

இப்போது அனுமதித்தாலும், ஓ.பன்னீர்செல்வம் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயாராக உள்ளார். யார் பொதுச்செயலாளார் என்பதை தொண்டர்கள் முடிவு செய்யட்டும். கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கமும், கொள்கையும் பொதுச்செயலாளரை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான்.

அதற்கு எதிராக தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்படுகிறது. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்தனர். அப்படியிருக்கும்போது, இந்த இரு பதவிகளையும் கலைக்க பொதுக்குழுவுக்கு அதிகாரமே இல்லை.

எனவே, பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்வதுடன், பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி வைத்த வாதம் வருமாறு:- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. ஆனால் கடந்த பொதுக்குழுவில் அதை நீக்கிவிட்டோம்.

அதற்கான அதிகாரம் பொதுக்குழுவிற்கு உள்ளது. பொதுக்குழு மூலம் ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது போலவேதான் இதையும் நீக்கி உள்ளோம். பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

அதனால் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்மானங்களும் செல்லும். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். இந்த பொதுக்குழுவை நாங்கள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்தோம்.

அதை உலகமே பார்த்தது. அவர் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த முடிவை எடுத்தார், ஆனால், அந்த நேரத்தில் ஓபிஎஸ் தரப்பினர் இதை பார்த்து இருக்க மாட்டார்கள். அதிமுக தலைமை அலுவலகத்தில் தகராறு செய்து கொண்டிருந்ததால் அவர்கள் டிவி பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. அதில் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்துதான் முடிவு செய்துள்ளனர். அதனால் பொதுக்குழு முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும், என்று எடப்பாடி வாதம் வைத்தார்.

Related posts