90 விமானங்களை இயக்கிய ஏர் இந்தியா பெண்கள்

ஏர் இந்தியா குழுமம் மகளிர் தினத்தை முன்னிட்டு முற்றிலும் பெண் ஊழியர்களைக் கொண்டு 90 விமானங்களை இயக்கி உள்ளது.

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் இந்த விமானங்களை குறித்த நேரத்தில் இயக்கி ஏர் இந்தியா குழும பெண் பைலட்கள் சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுவதும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தனியார் நிறு வனங்கள் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அந்த வகையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நேற்று வரை ஏர் இந்தியா குழுமம், பைலட் உட்பட முற்றிலும் பெண் ஊழியர்களைக் கொண்டு 90 விமானங்களை இயக்கியது.

இதில் ஏர் இந்தியா, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு 40 விமானங்களையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வளைகுடா நாடுகளுக்கு 10 விமானங்களையும், ஏர் ஆசியா உள்நாட்டுக்குள் 40 விமானங்களையும் இயக்கின. அந்த விமானங்களை குறித்த நேரத்தில் பெண் பைலட்கள் இயக்கி சாதனை படைத்தனர்.

இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை செயல் அதிகாரி அலோக் சிங் கூறும்போது, “எங்கள் நிறுவனத்தில் உயர் பதவி உட்பட அனைத்து நிலையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க பாடுபடுகிறோம். ஏர் இந்தியா குழுமத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள்.

விமான போக்குவரத்து துறையில் ஆண்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில், எங்கள் நிறுவனத்தில் முக்கிய பதவிகளில் பெண்கள் உள்ளனர் என்பதை பெருமையாக கூறிக் கொள்கிறோம்” என்றார்.

ஏர் இந்தியா குழுமத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 40% பேர் பெண்கள். இதில் விமான பைலட்களில் 15% பேர் பெண்கள். நாட்டிலேயே அதிக பெண் (200) பைலட்களைக் கொண்ட நிறுவனம் ஏர் இந்தியாதான். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஆசியா நிறுவனங்களில் 97 பெண் பைலட்கள் பணிபுரிகின்றனர்.

ஜேஆர்டி டாடா நினைவாக..: டாடா குழும நிறுவனர் ஜேஆர்டி டாடா கடந்த 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு வசமாகி ஏர் இந்தியா என்ற பெயரில் இயங்கியது.

இப்போது ஏர் இந்தியா மீண்டும் டாடா வசமாகி உள்ளது. இந்நிலையில், டாடா ஏர்லைன்ஸ் வர்த்தக சேவையைத் தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில்தான் 90 விமானங்களை முற்றிலும் பெண்களைக் கொண்டு இயக்கி உள்ளது ஏர் இந்தியா குழுமம்.

Related posts