மார்ச் மாதத்தில் அரசுக்கு தாங்க முடியாத கடன் சுமை

அரசாங்கத்துக்கு, மார்ச் மாதத்தில் மட்டும் தாங்கிக்கொள்ள முடியாத கடன் சுமை இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அமைச்சரவைக்கு அறியத்தந்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில், அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானம் 173 பில்லியன் ரூபாவாகும். அரச ஊழியர்களுக்கான சம்பளம்,

ஓய்வூதியம், சமுர்த்தி நிவாரணம் என்பவற்றுக்காக அரசாங்கம் 196 பில்லியனை செலவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாகவே அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்கத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நேற்று (21) இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அன்றாட அத்தியாவசிய செலவுக்காக மேலும் 23 பில்லியன் ரூபா தேவையென சுட்டிக்காட்டிய நிதி அமைச்சின் செயலாளர், அதற்கு மேலதிகமாக மார்ச் மாதத்தில் உள்ளூர், வெளிநாட்டு கடன் சேவைகளுக்காக 508 பில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் அரசின் வருமானம், செலவுகள் பற்றிய சுருக்கம்.

சகல செலவுகளின் பின் ரூ.554 பில். பற்றாக்குறை

01. அரசின் மொத்த வருவாய் ரூ.173 பில்.

02. ஊதியம், ஓய்வூதியம் மற்றும் நிவாரணத்துக்கான செலவு ரூ.196 பில்.

03. அரச நிர்வாகச் செலவு ரூ.23 பில்.

04. உள்நாட்டு வெளிநாட்டு கடன் சேவைகள் ரூ. 508 பில்.

05. பற்றாக்குறை ரூ.554 பில்.

Related posts