தேர்தல் செலவின சட்டமூலம் நிறைவேற்றம்..

ஆதரவு – 97 பேர்; எதிர்ப்பு – 36 பேர்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் சபையில் நேற்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று முழு

நாள் விவாதமாக சபையில் இடம்பெற்ற நிலையில் விவாதத்தின் இறுதியில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல சட்டமூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பைக் கோரினார்.

அதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதற்கிணங்க சட்டமூலம் 61மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நேற்றைய இந்த வாக்களிப்பில் 91 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

எதிரணி தரப்பிலிருந்து ஏ. எல். எம்அதாவுல்லா, ஜோன் செனவிரத்ன ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக்கட்சிகள் பங்கேற்கவில்லை. அதேபோன்றே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களான மனோகணேசன், திகாம்பரம் ஆகியோர் பங்கேற்கவில்லை.

இதேவேளை பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற புனர்வாழ்வு அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்திலும் பங்கேற்காதது போலவே இந்த தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்திலும் தமிழ்க்கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரையில் புனர்வாழ்வு அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் மட்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் எம்.பி. மட்டும் உரையாற்றியிருந்தார்.

Related posts