13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருத்தம் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தெற்கிற்கும் அவசியம் என்றும் தெற்கிலுள்ள முதலமைச்சர்களும் இதனையே கோருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ மக்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான சந்தேகம் உள்ளதால், சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்

என்றும் ஜனாதிபதி தெரிவித்தார் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,

வடக்கு, கிழக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், இவற்றுக்கு தீர்வு காண்பதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரச்சினைகளை ஒதுக்கியோ, காலந்தாழ்த்தியோ தீர்க்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தீர்வு தொடர்பில் பாராளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் வெளிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற அரச தைப்பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, தைப்பொங்கல் என்பது ஒரு தேசிய பண்டிகையாகும். நெல் அறுவடை செய்யும்போது அதனை கடவுளுக்குப் படைத்து திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். இன நல்லிணக்கம் மிகவும் அவசியமானது.

30-40 வருடங்களுக்கு மேல் யுத்தம், மோதல்கள்,குழப்பங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகளினால் நாடு பிரிந்திருந்தது. நாம்,ஒருமித்த நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது அவசியம். அதற்காக கடந்த 75 வருடங்களுக்கு முன்னர் டி,எஸ் சேனநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும். நெருக்கடியான வேளையில் நாம், ஒற்றுமையாக எமது தனித்துவத்தை உருவாக்க வேண்டும்.

வடக்கில்,தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்தப் பொங்கல் விழாவின் பின்னர் விரிவாக ஆராயப்படும். இதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நான்,அழைப்பு விடுத்தேன். மீண்டும் நாட்டை ஒன்றிணைக்கவும்,நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்குத் தௌிவுபடுத்தியுள்ளேன்.

பாராளுமன்றத்திலுள்ள தமிழ் எம்பிக்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்திக்கத் தீர்மானித்துள்ளேன். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி நாலாம் திகதி விடயங்களை முன்வைக்கவுள்ளேன்.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத்து க்கு அறிவித்துள்ளேன். இப்பிரச்சினைகளை ஒதுக்கியோ அல்லது காலந்தாழ்த்தியோ தீர்க்க முடியாது.

காணாமல்போனோரின் நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் பேச்சுவாரத்தை நடாத்தியுள்ளோம். நடந்தது என்ன என்பது தொடர்பில். உண்மையைக் கண்டறிவது அவசியம். யார் தவறு செய்துள்ளார்கள் என்பது கண்டறியப்படுவதும் அவசியம்.

அது தொடர்பில் மூன்று வாரங்களுக்கு முன் இராணுவத்தினரின் கருத்துக்களை வினவியிருந்தேன். உண்மையைக் கண்டறிவதை நாமும் விரும்புகிறோம். இதன் மூலம்தான் எம்மீதான குற்றச்சாட்டுக்களும் நீங்கும் என,இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனால்,அதற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளது. வடக்கிற்கு எதிராக இந்தச் சட்டத்தைக் கொண்டு வரத் தயாராவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே இச்சட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளோம். காணிப்பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை படையினர் தம்வசம் வைத்திருந்தனர்.

இவற்றில் முன்னூறு ஏக்கர் காணிகளே மக்களிடம் கையளிக்கப்பட வேண்டியுள்ளது. இதிலொரு பகுதியை விடுவிக்கவும் இராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

இது,வடக்குடன் மட்டும் தொடர்புடைய பிரச்சினையல்ல. தெற்கிலுள்ள முதலமைச்சர்களும் இதனைக் கோருகின்றனர். எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கலந்துரையாடி கட்டங்கட்டமாக இது தொடர்பான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும்.

தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. ஒரங்கட்டப்பட்ட கிராமங்களும் உள்ளன. கிறிஸ்தவ மக்களுக்கு தங்களது பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் உள்ளது.

இதுபற்றி ஆராய சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்க உள்ளோம். பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு இலங்கையர் என்ற தனித்துவத்தை உறுதிப்படுத்துவோம். இதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts