ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகை : ரணில்

இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது.

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும்.

பெத்லஹேமில் ஒரு ஏழைத் தொழுவத்தில் பிறந்த குழந்தையே இயேசு கிறிஸ்து ஆவார். இவர் உலகை யதார்த்தமாகப் பார்ப்பதில் பிறப்பிலிருந்தே முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க அவர் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.

இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார நெருக்கடி நிலையில் ஒருவரையொருவர் இரக்கத்துடனும் அன்புடனும் வாழ்த்தி, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவமாகும்.

“செலவுகளைக் குறைப்போம், எளிமையாக நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவோம், துன்பப்படுபவர்களுக்கு நம்மிடம் எஞ்சியிருப்பதைக் கொடுப்போம்” என்று பாப்பரசர் போப் பிரான்சிஸ், மனிதநேயத்தின் மதிப்பைக் கற்பிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகை வீட்டுக்கும் ஏழைக் குடிசைக்கும் ஒரேவிதமான நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை வழங்குவதே எங்கள் அரசாங்கத்தின் இலக்காகும்.

எனவே அனைவருக்கும் அன்பைப் பரப்பும் மற்றும் மனிதநேயத்தைப் பகிர்ந்து கொள்ளும் குடிமக்களாக இந்த பண்டிகைக் காலத்தில் அனைவரும் தங்கள் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதியளிக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் அற்புதமான பிறப்பின் மகிமையினால் நம் நாட்டைக் குணப்படுத்தும் வகையில் எதிர்கால தசாப்தத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

மேலும் இயேசு விரும்பிய மனிதநேயம், நல்லிணக்கம், தியாகத்தின் நற்செய்தி ஆகியன எங்கும் பரவி இந்நத்தார் பண்டிகை மகிழ்ச்சிகரமானதாக அமைய வாழ்த்துகின்றேன்.
ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
25-12-2022

—–

உலகை யதார்த்தபூர்வமாக நோக்குவதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகின்ற நத்தார் பண்டிகையை, அன்பையும், மனித மாண்பையும், மனிதநேயத்தையும் மதிக்கும் ஒரு சமுதாயத்திற்கான புதியதோர் அடித்தளமாக ஆக்கிக்கொள்வோம்.

அது ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விடுவித்து, சிறந்ததோர் சமுதாயத்தை உருவாக்க தன்னை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் அடிப்படையிலான உண்மையான காலத்தின் தேவையாகும்.

வெறுப்பையும் குரோதத்தையும் ஒழித்து, மோதல்கள் தீர்க்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் உணவுப் பயிர்கள் செழித்து விளங்கும் சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை மற்றுமொரு ஆரம்பமாக ஆக்கிக்கொள்ள முடியும்.

அமைதி, சமாதானம், சமத்துவம் போன்ற அற்புதமான போதனைகளின் அடிப்படையில் ஏனையவர்களுக்கு உதவுவதன் மூலம் நத்தார் பண்டிகையை அர்த்தமிக்கதாக கழிப்போம்.
தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
25-12-2022

——

அன்பு, சமாதானம், சகோதரத்துவம் என்ற கருப்பொருளைக் கொண்ட, உன்னதமான நத்தார் பண்டிகை கிறிஸ்தவர்களின் சமயப் பண்டிகை மட்டுமல்லாது, இனம், மதம், குலம், நிறம், சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலுமுள்ள எண்ணற்ற மக்களால் கொண்டாடப்படும் கலாசார விழாவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி, தன்னுடைய குமாரனை உலகிற்கு அனுப்பியது, தேவனுடைய இராஜ்யத்தின் மதிப்புகள் மீண்டும் பூமியில் வாழ வேண்டும் என்று இறைவன் எதிர்பார்த்ததனாலாகும்.

உலகில் அனைத்து இறைதூதர்களும் ஒரு நல் வழியைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களது தர்மத்தின் சாராம்சம் சாந்தி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் கருணையாக இருந்தது. ஒருவரையொருவர் அன்பாக நடத்துதல், அனைத்து மனித இனத்தையும் சகோதரத்துவத்துடன் நடத்துதல் ஆகிய உன்னத நற்பண்புகளை நடைமுறையில் உலகிற்கு போதித்தார்.

எனவே, நாம் எப்போதும் உண்மையான நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம். ஆகவே, இந்த வருட நத்தார் பண்டிகையை நாம் இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம்.

சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
25-12-2022

——-

“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” – லூக்கா 2:14

கிறிஸ்து பிறந்த திருநாள் இன்றாகும். இயேசு கிறிஸ்து பிரான் எப்பொழுதும் மக்களுக்கு பணக்காரர், ஏழை என்ற வேறுபாடு காட்டாத ஒரு உன்னதத் தலைவராவார். அவர்கள் இறைவனின் குழந்தையாக இந்தப் பூமியில் பிறந்த நாளில், மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பாளர்கள், தேவதூதர்கள் அவர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வந்ததாக எடுத்துக்கொண்டனர்.

மிகவும் சவாலுக்கு மத்தியில் முழு உலகமும் நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் இந்நாளில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் இறைவனின் நித்திய ஆன்மீக சுகம் மற்றும் அமைதி இலங்கையைச் சேர்ந்த கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கும் நிச்சயமாகக் கிடைக்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

சுறுசுறுப்பான வாழ்கை முறையில் இந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் உங்கள் அனைவரும், வெறுமனே லௌகீகத்தைப் பின்தொடர்ந்து செல்லாமல், ஆன்மீக ரீதியான ஆறுதல், இறைவனின் ஆசிர்வாதத்தைப் பெறக்கூடிய, இறைவனால் நேசிக்கப்பட்ட மனிதர்களாக வாழப் பிராத்திக்கிறேன்!
மஹிந்த யாப்பா அபேவர்தன,

சபாநாயகர்,
இலங்கைப் பாராளுமன்றம்.
2022.12.25

Related posts